நாட்டில் மூன்றில் இரண்டு குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாகிறார்கள் ஆய்வில் அதிர்ச்சி தகவல்


நாட்டில் மூன்றில் இரண்டு குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாகிறார்கள் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 8 Jan 2018 3:45 AM IST (Updated: 8 Jan 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

நாக்பூர்,

இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பாலியல் வன்கொடுமைகள்

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒன்றும் அறியாத பிஞ்சு குழந்தைகளை எளிதாக ஏமாற்றி காம வெறியர்கள் தங்களின் இச்சைக்கு இறையாக்கிக் கொள்கின்றனர். இதனால் பாதிக்கப்படும் குழந்தைகள் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்திய குழந்தைகள் வன்கொடுமை மற்றும் குழந்தை தொழிலாளர் தடுப்பு கழகத்தின் தலைவரான டெல்லியை சேர்ந்த டாக்டர் சேத், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

ஆய்வு

மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து கண்டறிய 13 மாநிலங்களில் குழு ஒன்றை அமைத்தது. இதில் சுமார் 70 மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. ஒரு நிமிடத்தில் 5 குழந்தைகள் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். அதிலும் பீகார், உத்தரபிரதேசம், அரியானா, ஒடிசா மற்றும் புதுடெல்லி ஆகிய மாநிலங்களில் இந்த கொடுமை அதிகமாக நடைபெறுகிறது. அங்குள்ள குழந்தைகள் மனிதாபிமானம் அற்ற நிலையில் நடத்தப்படுகிறார்கள். அதிலும் 46 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மூலமும், தெரிந்தவர்கள் மூலமும் தான் இந்த துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

ஒழிக்கப்பட வேண்டும்

2012-ம் ஆண்டு குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை தடுப்பதற்காக ‘போஸ்கே’ சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இதுவரை நாம் அதில் சரியான வெற்றியை எட்டவில்லை என்பதையே இந்த தகவல்கள் காட்டுகின்றன. குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நம் நாட்டில் இருந்து ஒழிக்கப்படவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story