புதுவையில் 4வது நாளாக பயணிகள் பரிதவிப்பு


புதுவையில் 4வது நாளாக பயணிகள் பரிதவிப்பு
x
தினத்தந்தி 8 Jan 2018 4:15 AM IST (Updated: 8 Jan 2018 3:47 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு பஸ்கள் 4வது நாளாக இயக்கப்படாத காரணத்தால் புதுவையில் பயணிகள் பரிதவித்தனர். மேலும் புதுவையில் சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்தது.

புதுச்சேரி,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான 13–வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் கடந்த 4–ந் தேதி திடீரென ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் நேற்று 4–வது நாளாக தொடர்ந்தது.

புதுவை மாநிலத்தில் அதிக அளவில் தமிழக அரசுக்கு சொந்தமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் புதுவையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தமிழக அரசு போக்குவரத்து சொந்தமான பஸ்கள் இயக்கப்படவில்லை. தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படாததால் புதுவையில் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் புதுவையில் இருந்து பிற பகுதிகளுக்கு இயக்கப்படும் தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதேபோல் வெளியூர்களுக்கு செல்லும் டிராவல்ஸ், ஆம்னி பஸ்களில் பயணிகள் அதிக கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

புதுவை மாநிலத்தில் வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பஸ்களில் தான் வருவார்கள். தற்போது தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படாத காரணத்தால் புதுவையில் கடந்த 2 தினங்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டன. இதனால் கடற்கரை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

புதுவை அரசுக்கு சொந்தமான பஸ்களும், தனியார் பஸ்களுமே இயக்கப்பட்டன. புதுவை பஸ் நிலையத்திற்கு தமிழக அரசு பஸ்கள் வராத காரணத்தால் புதுவை அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணிகள் கூட்ட நெரிசலில் படிக்கட்டில் பயணம் செய்ததை காண முடிந்தது.

இன்று (திங்கட்கிழமை) வழக்கம்போல அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும். இதனால் புதுவைக்கு சுற்றுலா வந்தவர்கள், உறவினர்கள் இல்லங்களுக்கு வருகை தந்தவர்கள் நேற்று தங்களின் ஊர் திரும்புவதற்காக வந்தவர்கள் பஸ்கள் இயக்கப்படாத காரணத்தால் அவதிக்கு உள்ளானார்கள். பின்னர் அவர்கள் ரெயில் மற்றும் ஆம்னி பஸ்களில் தங்களின் ஊர்களுக்கு திரும்பினார்கள். சிலர் டிக்கெட் கிடைக்காமல் பரிதவித்தனர்.


Next Story