பூமியின் எதிர்காலம்?
வானவியல் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் பூமி மற்றும் பிரபஞ்சத்தின் எதிர்காலத்தை பின்வருமாறு கணிக்கிறார்கள் உலகின் சில வானியல் ஆய்வாளர்கள்.
தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான வளர்ச்சியின் அடிப்படையில் நாம் வாழும் இந்த காலகட்டம் மனித வரலாற்றில் மிக மிக முக்கியமானது. ஏனெனில், தன்னைத்தானே இயக்கிக்கொள்ளும் ‘செல்ப் டிரைவிங்’ கார்கள் தொடங்கி, பறக்கும் கார்கள், முதுகில் பொருத்திக்கொண்டு மேலெழும்பி பறக்கும் தனிநபர் ஜெட், துபாய் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் குடியுரிமையைக் கூட பெற்றுவிட்ட ரோபாட் பெண் உள்ளிட்ட ரோபாட் மற்றும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளின் அசுர வளர்ச்சி ஒருபுறம்.
அணு ஆயுதப்போர், உலக வெப்பமாதல் மற்றும் மனிதன் உள்ளிட்ட பல உலக உயிர்களை துடைத்தழிக்கும் ஆபத்தான உயிர்கொல்லி நோய், என உலக அழிவை ஏற்படுத்தும் பல ஆபத்துகள் மற்றொருபுறம். ஆனால் மிகவும் அதிர்ச்சிகரமாக, சூரியனுடைய வெப்பத்தால் முதலில் பொரிக்கப்பட்டு பின்னர் வெடித்துச் சிதறி சின்னாபின்னமாகிப் போவதுதான் பூமியின் விதி என்று உறுதியாகக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். சூரியனால் ஏற்பட இருக்கும் இந்த பேராபத்தை மனிதனால் மட்டுமல்ல, அந்தக் கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது என் கிறார்கள் சில வானியல் ஆய்வாளர்கள்.
ஆனால், ‘சூரியனால் ஏற்படக்கூடிய பேராபத்து உள்ளிட்ட அனைத்து அழிவுகளையும் தாண்டியும் உயிர்கள் மற்றும் மனித இனம் வாழும் என்பது உறுதி’ என்கிறார் எதிர்காலம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும், கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர் கிரிகோரி லாப்ளின்.
அப்படியா...? அதெப்படி அவ்வளவு உறுதியாகக் கூறுகிறார் கிரிகோரி லாப்ளின்? என்றுதானே யோசிக்கிறீர்கள்?
தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் மனித இனத்தின் தொடர்ச்சியான பரிணாமம் ஆகியவற்றின் காரணமாக ‘பூமி அழிவுக்குப்பின்னும் ஏதாவது ஒரு வடிவத்தில் மனித இனம் வாழ்ந்தே தீரும்’ என்றும், ஆனால் அப்படி வாழும்போது ‘ஒரு கோள்விட்டு மறுகோள் என்று மாறி மாறி பல கோள்களில் வாழ்ந்தாக வேண்டும்’ என்றும் கூறுகிறார் லாப்ளின்.
மேலும், வானவியல் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் பூமி மற்றும் பிரபஞ்சத்தின் எதிர்காலத்தை பின்வருமாறு கணிக்கிறார்கள் உலகின் சில வானியல் ஆய்வாளர்கள். அதை சற்று விரிவாக காண்போம்.
பலகோள் காலம் (Multi planet era)
முதல் உலக அழிவு இனிவரும் 150-வது கோடி வருடத்தில் நிகழும் என்கிறார் இங்கிலாந்தில் உள்ள ஈஸ்ட் ஆங்க்லியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழலியல் விஞ்ஞானியான ஆன்ட்ரூ ரஷ்பி. அதாவது பூமியில் உள்ள கடல்கள் கொதிக்கும் அளவுக்கு உலகை சூடேற்றும் வகையில் ‘சூப்பர் உலக வெப்பமாதல்’ நிகழும் (super global warming) என்கிறார்.
ஆனால் மனிதர்களாகிய நமக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. ஏனெனில், அடுத்த 150 கோடி வருடங்களில் மனிதர்கள் நம் சூரிய மண்டலம் மொத்தத்தையும் சுற்றி வந்து நிலவு மற்றும் செவ்வாய் உள்ளிட்ட பல கோள்களில் குடியேறி இருப்போம். அவ்வளவு ஏன், பால் வீதியில் உள்ள இதர நட்சத்திரங்களில் கூட குடியேறி இருக்கலாம். இன்றிலிருந்து 750-வது கோடி ஆண்டில், சூரியன் தன் ஹைட்ரஜன் எரிவாயு மொத்தத்தையும் எரித்துவிட்டு ஹீலியத்தை பயன்படுத்தத் தொடங்கியிருக்கும் என்கிறார் கார்நெல் பல்கலைக்கழகத்தின் வானியலாளர் லிசா கால்டேநெக்கர்.
அதன் காரணமாக சூரியன் ஒரு பலூன் போல பெரிதாக சிவப்பு பூதமாக மாறும். பின் அதன் விளைவாக, பூமியும் செவ்வாய் கிரகமும் அப்பளம் போல பொரிந்து விடும். மறுபுறம் தற்போது பனி நிலவுகளாக இருக்கும் வியாழன் மற்றும் சனி கிரகங்களின் நிலவுகள் மனித குடியிருப்புக்கு ஏதுவான தண்ணீர் உலகங்களாக மாறும். சுருக்கமாக, அடுத்த 800 கோடி வருடத்தில் சூரிய மண்டலத்தில் உயிர் வாழ்க்கை சாத்தியமற்றுப் போகும்.
நட்சத்திர காலம்
பால்வீதியில் தத்தம் கோள்களைக் கொண்ட சுமார் 200 கோடி நட்சத்திரங்கள் உள்ளன. 800 கோடி ஆண்டுகளுக்குப்பின் நம் எதிர்கால சந்ததியினர் ஒளியின் வேகத்தை ஒட்டிய வேகத்தில் பயணம் செய்வதில் வல்லவர்களாகி இருப்பார்கள். மனிதர்களை புதிய நட்சத்திரம் அல்லது கிரகத்துக்கு கொண்டுசெல்லும் ‘இண்டர்ஸ்டெல்லார் ஆர்க்’ (interstellar ark) எனப்படும் ராட்சத விண்வெளி கப்பல்கள் உருவாக்கப்பட்டு அதில் ஆயிரக்கணக்கான மனிதர்கள் வாழ்ந்து மடிந்து இறுதியாக சிலர் புதிய நட்சத்திரத்தை அடைந்து பின் பல்கிப்பெருகுவர். நட்சத்திரம் விட்டு செல்லும் மனித இனம் சுமார் 12 கோடி ஆண்டுகளில் அழிந்துபோகக்கூடிய சூரியன் போன்ற நட்சத்திரங்களில் வாழ்ந்து, பின் அடுத்தடுத்த நட்சத்திரங்களில் வாழ்வார்கள். இன்னும் 10 ஆயிரம் கோடி ஆண்டுகளில் புதிய நட்சத்திரங்கள் உற்பத்தியாகத் தேவையான மூலப்பொருள் மொத்தமும் தீர்ந்துவிடும் என்பதால் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்களே இருக்காது. எனவே மனிதர்கள் வாழ புதிய வகையான இடத்தைத் தேட வேண்டும்.
ஈர்ப்புக் காலம் (The gravitational era)
பிரபஞ்சத்தின் கடைசி நட்சத்திரமான சிவப்பு குள்ளர் (Red dwarf) வகை நட்சத்திரங்களும் இறந்த பின்னர், பிரபஞ்சம் இருண்டுபோகும். அப்போதும் மனிதர்கள் அழிய மாட்டார்கள். ஏனெனில், இச்சூழலில் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி கருந் துளைகளைச் சுற்றி விண்வெளி மின் நிலையங்களை அமைக்கும் ‘கம்ப்யூட்டருடன் ஒன்று கலந்து விட்ட மற்றும் வடிவமே இல்லாத’ அதீதமாக பரிணமித்த ஒரு மனித இனம் இருக்கும் என்றும், அந்தக்காலம் ‘ஈர்ப்புக் காலம்’ என்று அழைக்கப்படும் என்றும் ஆச்சரியப்படுத்துகிறார் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக இயற்பியலாளர் ஜே.ரிச்சர்டு கோட்.
சுருக்கமாகச் சொன்னால், கரி அடிப்படையிலான தற் போதைய உலக உயிரமைப்பானது ஈர்ப்புக் காலத்தில் தகவல் அடிப்படையிலான ஒரு உயிரமைப்பாக மாறி இருக்கும். இன்றிலிருந்து ஒரு லட்சம் கோடி ஆண்டுகளில் தொடங்கும் ஈர்ப்புக் காலம் கோடி கோடி ஆண்டுகள் வரை தொடரும் என்கிறார் கிரிகோரி லாப்ளின்.
இப்படியே தொடரும் உயிர் வாழ்க்கை எதுவரை தொடரும்?
இயற்பியல் கருதுகோள்களின் அடிப்படையில் நோக்கினால், இன்றிலிருந்து ஒரு டெசில்லியன் ஆண்டுகள் (One Decillion=10 33 years) முதல் ஒரு விஜிண்டில்லியன் ஆண்டுகளில் (One vigintillion=1064 years) அணுக்களில் உள்ள புரோட்டான்கள் அழியும் என்று கூறப்படுகிறது. அந்தச் சூழலில் கருந்துளைகள் மட்டுமே பிரபஞ்சத்தில் உள்ள ஒரே ஒரு ஒருங்கமைக்கப்பட்ட பருப்பொருளாக இருக்கும் என்றும் கூறப்படு கிறது.
அந்த காலக்கட்டத்தில் மனிதர்களுக்கு பூத உடல் என்று ஒன்றே இருக்காது. இன்றிலிருந்து பத்து டியோ ட்ரைஜின்டில்லியன் (duotrigintillion) ஆண்டுகளில் (One duotrigintillion=10100 years) கருந்துளைகளும் ஆவியாகி விடும். பிரபஞ்சத்தில் ஆற்றல் என்ற ஒன்றே இருக்காது. மாறாக குளிர்ந்த துகள்களால் ஆன ஒரு அமைப்பு தோன்றும். இதுவே உயிர் களின் முடிவுகாலமாக இருக்கலாம்.
அல்லது கடைசி கருந்துளை அழிவதற்கு முன்னால் ஒரு பெருவெடிப்பு ஏற்படலாம் என்கிறது ‘காஸ்மாலாஜிக்கல் தியரி’ (cosmological theory) எனும் கருதுகோளை உருவாக்கிய பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் பால் ஸ்டெய்ன்ஹார்ட் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் அன்னா இஜ்ஜாஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ள ஒரு ஆய்வு மாதிரி. இக்கருதுகோளின்படி ‘பிரபஞ்சம் ஒரு முடிவில்லா தோற்ற சுழற்சியில் தொடர்ந்து மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டே இருக்கும்’ என்று கருதப்படு கிறது.
Related Tags :
Next Story