பஸ் ஸ்டிரைக் எதிரொலி ராமேசுவரம் பாசஞ்சர் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
பஸ் ஊழியர்கள் போராட்டம் காரணமாக ராமேசுவரம் பாசஞ்சர் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் செங்ககோட்டைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
மதுரை,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப்போராட்டம் காரணமாக பஸ்கள் ஓடவில்லை. இதனால், அன்றாட அலுவல்களுக்கு செல்பவர்கள், மாணவ–மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க மதுரை கோட்ட ரெயில்வே சார்பில் ஏற்கனவே, ரெயில் நிலையங்களில் கூடுதல் டிக்கெட் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதை கண்காணிக்க கோட்ட வர்த்தக மேலாளர் பரத் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க நேற்று மதுரை–ராமேசுவரம் பாசஞ்சர் ரெயிலில் (வ.எண்.56725/56726) இரு மார்க்கங்களிலும் 2 கூடுதல் பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டன.
அதேபோல, இன்று (செவ்வாய்க்கிழமை) மதுரையில் இருந்து காலை 8.45 மணிக்கு செங்கோட்டைக்கு ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மதியம் 12.30 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையம் சென்றடையும். மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு மதுரை ரெயில்நிலையம் வந்தடைகிறது.
இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே முதுநிலை வர்த்தக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார்.