போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுப்பு போலீசாருடன் வாக்குவாதம்
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால், போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
தேனி,
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால், போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழக அரசிடம் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதன் காரணமாக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தொழிலாளர்கள் நேற்று காலை திரண்டு வந்தனர்.
தொழிலாளர்கள் வரும் தகவல் முன்கூட்டியே தெரிந்ததால் பணிமனை முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டம் நடத்த வந்த தொழிற்சங்கத்தினரிடம், ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர், போலீசாரிடம் தொழிற்சங்கத்தினர் அனுமதி கேட்டனர். அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதனால், போலீசாருக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டதால் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தாமல் திருப்பி சென்றனர்.
நேற்று மாலையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பழனிசெட்டிபட்டி பணிமனைக்கு வந்தனர். அவர்களுக்கும் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால், வாயிற்கூட்டம் நடத்தி கொள்கிறோம் என்று அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.
அதன்படி, போக்குவரத்து கழக பணிமனை முன்பு அரசு ஊழியர்கள் வாயிற்கூட்டம் நடத்தினர். இதற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி பேசினார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களின் கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் பேசினர்.