குரோம்பேட்டை பஸ் நிலையத்தில் நகரும் படிக்கட்டு இயங்காததால் முதியவர்கள் அவதி


குரோம்பேட்டை பஸ் நிலையத்தில் நகரும் படிக்கட்டு இயங்காததால் முதியவர்கள் அவதி
x
தினத்தந்தி 9 Jan 2018 4:15 AM IST (Updated: 9 Jan 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

குரோம்பேட்டை பஸ் நிலையத்தில் நகரும் படிக்கட்டு இயங்காததால் முதியவர்கள், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தை இணைக்கும் வகையில் ஜி.எஸ்.டி. சாலையில் நடை மேம்பாலம் உள்ளது. இந்த நடை மேம்பாலத்தில் சாலையின் இரு புறமும் நகரும் படிக்கட்டுகள் உள்ளன. இதை நோயாளிகள், முதியவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இதில் குரோம்பேட்டை பஸ் நிலைய பகுதியில் உள்ள நகரும் படிக்கட்டு பழுதடைந்து 15 நாட்களுக்கு மேல் ஆகிறது. எனவே அது தற்போது பூட்டப்பட்டு இருக்கிறது.

இதனால் குரோம்பேட்டை பஸ் நிலைய பகுதியில் இருந்து நடை மேம்பாலம் வழியாக ரெயில் நிலையம் மற்றும் கிழக்கு பகுதி ஜி.எஸ்.டி. சாலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். முதியவர்கள், வயதான பெண்கள் சாலையை கடப்பதற்கு நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதைப்போல ஜி.எஸ்.டி. சாலை நடுவில் தடுப்புகள் உள்ளதாலும் நடை மேம்பாலத்தின் படிக்கட்டில் ஏற முடியாதவர்கள் சிக்னல் வரை நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் மேலும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் சார்பில் குரோம்பேட்டை குடியிருப்போர் சங்க கூட்டமைப்பு தலைவர் சந்தானம், நெடுஞ்சாலை துறையினருக்கு புகார் அளித்தார். அப்போது, உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் பல நாட்கள் கடந்தும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த பகுதியில் நகரும் படிக்கட்டுகள் பராமரிப்பை தனியார் நிறுவனத்திற்கு நெடுஞ்சாலை துறையினர் வழங்கி உள்ளனர். ஆனால் அந்த நிறுவனம் பராமரிப்பு பணியை மற்றொரு துணை நிறுவனத்திற்கு அளித்ததாக தெரிகிறது. அந்த நிறுவனத்திற்கு பராமரிப்பு தொகை வழங்கப்படாததால் அந்த நிறுவனம் பழுதை சீர் செய்யாமல் உள்ளதாக தனியார் நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஆனால் இந்த பராமரிப்பு பணிகளுக்கு அரசு முறையாக கட்டணம் செலுத்தி வருவதாகவும், தனியார் நிறுவனம் உடனடியாக பழுதை சீர் செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நெடுஞ்சாலை துறையினர் உறுதி அளித்து உள்ளனர்.

இவ்வாறு பராமரிப்பு நிறுவனங்கள் இடையே செலவு தொகை வாங்குவதில் ஏற்பட்ட மோதலுக்கு பொதுமக்கள் துயர் அனுபவிப்பது எந்த வகையில் நியாயம்? என கேள்வி எழுப்பும் முதியவர்கள், இந்த பிரச்சினையில் நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக தலையிட்டு நகரும் படிக்கட்டை சீரமைத்து மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story