பொங்கல் பண்டிகை சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு இன்று முதல் நடைபெறுமா?
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பஸ்களுக்கான டிக்கெட் கவுண்ட்டர்கள் இன்று திறக்கப்படுகிறது. போக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்தத்தால் முன்பதிவு தொடங்குமா?
தாம்பரம்,
சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களை கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம். இதற்காக மேற்படி பண்டிகை நாட்களில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அந்தவகையில் வருகிற 14–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல 11, 12 மற்றும் 13–ந்தேதிகளில் 11 ஆயிரத்து 983 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதைப்போல பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக 15 முதல் 17–ந்தேதி வரை மொத்தம் 10,595 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதற்காக டிக்கெட்டுகளை கணினி மூலம் உடனடியாக முன்பதிவு செய்யும் வகையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் 26 கவுண்ட்டர்கள், தாம்பரம் சானடோரியத்தில் 2 கவுண்ட்டர்கள், பூந்தமல்லியில் ஒரு கவுண்ட்டர் என மொத்தம் 29 சிறப்பு முன்பதிவு கவுண்ட்டர்கள் அமைக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கடந்த வாரம் அறிவித்து இருந்தார்.
அதன்படி கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி பஸ் நிலையங்களில் தற்போது சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை இன்று முதல் செயல்பட வேண்டும்.
ஆனால் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 4–ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் வழக்கமாக இயங்கக்கூடிய பேருந்துகள் கூட இயங்காமல் போக்குவரத்து முடங்கி உள்ளது.
இந்த வேலை நிறுத்தம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், பொங்கல் சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு தொடங்குமா? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவ்வாறு முன்பதிவு செய்யப்பட்டாலும் பஸ்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படுமா? என்றும் அவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இதுதொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகளை கேட்டபோது, ‘முன்பதிவு தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்’ என தெரிவித்தனர்.