கோடை சீசனையொட்டி மலர் கண்காட்சி: ஊட்டி பூங்காவில் 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசனையொட்டி மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்காக 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2–வது சீசனும் நிலவுகிறது. கோடை சீசனை முன்னிட்டு, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வருகிற மே மாதம் 122–வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.
இதற்காக பூங்காவில் பல்வேறு பகுதிகளில் பாத்திகள் அமைக்கப்பட்டு தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வகையான மலர் செடிகள் நர்சரியில் வளர்க்கப்பட்டு வந்தன. அதனை தொடர்ந்து முதல் கட்டமாக சால்வியா, டெல்பீனியம், பென்ஸ்டிமன் போன்ற மலர் நாற்றுகள் நடும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இதனை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். இது குறித்து அவர் கூறியதாவது:–
நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு சைக்லமன், சினரேரியா, ஜெரோனியம், கிளாக்ஸ்சீனியா, ரெனன்குளோஸ், ஓரியண்டல்லில்லி, ஆசியாடிக்லில்லி, டேலியா, இன்கா மேரிகோல்டு, பிகோனியா, கேன்டீடப்ட், டெல்பீனியம், பிரெஞ்சு மேரிகோல்டு, பேன்சி, பெட்டுனியா, பிளாக்ஸ், பிரிமுலா, ஜினியா, ஸ்டாக், கேல், வெர்பினா, சூரியகாந்தி, சிலோசியா, ஆன்டிரைனம், வயோலர் உள்பட மொத்தம் 230 வகையான மலர் செடிகளின் விதைகள் ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டு நர்சரியில் வளர்க்கப்பட்டன.
கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், பூங்காவில் 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளது. மேலும் இத்தாலி நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டு தும்மனட்டி அரசு தோட்டக்கலை பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட 15 ரக கார்னேசன் மலர்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
இதை தவிர மலர் கண்காட்சி நடைபெறும் அன்று சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வகையில் மலர் மாடத்தில் 15 ஆயிரம் பூந்தொட்டிகளை அடுக்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவைகள் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவரும். தற்போது நடவு செய்யும் மலர் நாற்றுகள் மே மாதம் முதல் வாரத்தில் பூக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) சிவசுப்ரமணியம், துணை இயக்குனர் உமாராணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.