திருந்தி வாழ ஆசைப்படும் ரவுடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு


திருந்தி வாழ ஆசைப்படும் ரவுடி  போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 9 Jan 2018 4:30 AM IST (Updated: 9 Jan 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

கொலை உள்பட 40 வழக்குகள் உள்ள பிரபல ரவுடி முட்டை கோபி, தான் திருந்தி வாழ ஆசைப்படுவதாகவும், அதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

சென்னை,

சென்னை கொடுங்கையூர் கும்மாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபி என்ற முட்டை கோபி (வயது 36). பிரபல ரவுடியான இவர் கொடுங்கையூர் மற்றும் மாதவரம் பால்பண்ணை போலீஸ் நிலையங்களில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இவர் மீது கொலை வழக்கு உள்பட 40 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தநிலையில், தான் திருந்தி வாழ ஆசைப்படுவதாகவும், தன் மீது பொய் வழக்கு போடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், கோரிக்கை வைத்து நேற்று, ரவுடி முட்டை கோபி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தார்.

அவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 10 ஆண்டுகளாக நான் சிறை பறவையாகத்தான் வாழ்ந்து வருகிறேன். என் மீது 40 வழக்குகள் உள்ளன. சமீபத்தில் ஒரு கொலை வழக்கில் கொடுங்கையூர் போலீசார் என்னை பொய்யாக சேர்த்து விட்டனர். என் மீதுள்ள வழக்குகளில், பாதி வழக்குகளுக்கு மேல் பொய்யான வழக்குகள் தான். போலீசார் தங்களுக்கு தேவைப்படும் வழக்குகளில் என்னை குற்றவாளியாக்கி விடுகிறார்கள்.

11 முறை என்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். அதில் 5 முறை உயர்நீதிமன்றம் என்னை விடுதலை செய்துள்ளது. என் மீதுள்ள பெரும்பாலான வழக்குகளில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. சில நேரங்களில் போலீசார் என்னை ஊரை காலி செய்யுமாறு உத்தரவிடுகிறார்கள். நான் பிறந்த மண்ணில் கூட என்னை வாழவிடாமல் தடுக்கிறார்கள்.

நான் திருந்தி வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு தரும்படி வேண்டுகிறேன். என் மீது பொய்யான வழக்கு போடக்கூடாது என்று கொடுங்கையூர் மற்றும் மாதவரம் பால்பண்ணை போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

போலீசார் கொடுக்கும் தொல்லையால் எனது பெற்றோர் மற்றும் மனைவி துயரப்படும் நிலை உள்ளது. அதனால், எனக்கு திருந்தி வாழ ஒரு வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோல் ஏற்கனவே திருட்டு வழக்கு கைதி ஒருவர் திருந்தி வாழ அனுமதிக்கும்படி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரும் கொடுங்கையூர் போலீசார் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். தற்போது ரவுடி முட்டை கோபியும் கொடுங்கையூர் போலீசார் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story