பாகூர் அரசு பள்ளியில் கவர்னர் திடீர் ஆய்வு
பாகூர் அரசு பள்ளியில் கவர்னர் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு ஆங்கில மொழியில் தேர்வு நடத்தினார்.
பாகூர்,
புதுவை மாநிலம் பாகூரில் பாரதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கவர்னர் கிரண்பெடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களிடம் கலந்துரையாடியபோது, ஆங்கில அறிவுத்திறனை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார். சில மாதங்கள் கழித்து மீண்டும் பள்ளிக்கு வரும்போது மாணவர்களின் ஆங்கிலத்திறன் மேம்பட்டிருக்கவேண்டும், அப்போது நடத்தும் தேர்வில் வெற்றிபெற்றவருக்கு பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி நேற்று மதியம் கவர்னர் கிரண்பெடி பாகூர் அரசு பள்ளிக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினார். அவரை பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர். பின்னர் பிளஸ்–1, பிளஸ்–2 மாணவர்களை தனியாக அழைத்து அவர்களின் ஆங்கிலத்திறன் குறித்து தேர்வு வைக்கப்போவதாக கவர்னர் தெரிவித்தார். இதையடுத்து மாணவர்களிடம் வெள்ளை காகிதம் கொடுக்கப்பட்டது.
அதில், பெற்றோர் பெயர், அவர்களின் தொழில், வருமானம் மற்றும் மாணவர்களின் எதிர்கால சிந்தனை குறித்து ஆங்கிலத்தில் எழுதி தருமாறு கவர்னர் கூறினார். மாணவர்களும் அதனை எழுதி கொடுத்தனர். இதை வாங்கிப் பார்த்த கவர்னர், சிலர் நன்றாக எழுதியிருப்பதாக கூறி பாராட்டினார்.
வருகிற 12–ந் தேதி (வெள்ளிக்கிழமை) கவர்னர் மாளிகைக்கு பிளஸ்–1, பிளஸ்–2 மாணவர்கள், தங்களின் பெற்றோருடன் பஸ் வசதி செய்யப்படும். அங்கு ஆங்கிலத்தில் கலந்துரையாடல் நடத்தப்பட்டு, அதில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று கவர்னர் கூறினார். மேலும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான தொழிற்கல்வி குறித்து பயிற்சி அளிக்க ஆசிரியர்களிடம் கவர்னர் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது கல்வித்துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜு, பள்ளி துணை முதல்வர் வெங்கடேசன் மற்றும் ஆசிரியர்கள் பலர் உடனிருந்தனர்.