காந்திவிலியில் பயங்கரம் சிவசேனா முன்னாள் கவுன்சிலர் குத்திக்கொலை
காந்திவிலியில், சிவசேனாவை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் கத்தியால் குத்திப்படுகொலை செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பை காந்திவிலி, சம்தாநகர் பகுதியில் வசித்து வந்தவர் அசோக் சாவந்த். முன்னாள் சிவசேனா கவுன்சிலர் ஆவார். இவர் சம்தாநகர் பகுதியில் இருந்து 2 முறை கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது இவர், கேபிள் டி.வி. தொழில் செய்து வருகிறார்.
அசோக் சாவந்த் நேற்று முன்தினம் இரவு நண்பர் ஒருவரை சந்தித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். இந்தநிலையில் அவர் வீட்டிற்குள் நுழைய முயன்றபோது, அவரது வருகைக்காக காத்திருந்த 2 பேர் அசோக் சாவந்தை வழி மறித்தனர்.
திடீரென அந்த நபர்கள் 2 பேரும் அசோக் சாவந்தை தாங்கள் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கிச்சரிந்தார். எனினும் ஆத்திரம் தீராத 2 பேரும் அவரை சரமாரியாக வாளால் வெட்டினர்.
பின்னர் அங்கு இருந்து இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இதற்கிடையே சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்கள் அசோக் சாவந்த் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அசோக் சாவந்தை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
இதையடுத்து போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில், முன்னாள் கவுன்சிலர் அசோக் சாவந்தை குத்திக்கொலை செய்தவர்களில் ஒருவனின் பெயர் ஜக்கா என்பது தெரியவந்தது. ஜக்கா மீது பல்வேறு குற்ற வழக்குள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல சம்பவம் நடந்த சில நாட்களுக்கு முன் அசோக் சாவந்திற்கு கொலை மிரட்டல்கள் செல்போனில் வந்துள்ளது. இதுகுறித்து அவர் போலீசிலும் புகார் அளித்து உள்ளார். இந்தநிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையில் தொடர்புடையவர்கள் யார்?, கொலைக்கான காரணம் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவசேனா முன்னாள் கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் அங்கு பெரும் பதற்றம் உண்டானது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பாதுகாப்பு கருதி போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர்.