5-வது நாளாக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்


5-வது நாளாக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 9 Jan 2018 4:30 AM IST (Updated: 9 Jan 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் 5-வது நாளாக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் தடை விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந்தேதி இரவு முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் அண்ணா தொழிற்சங்கத்தை தவிர மற்ற தொழிற்சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் நேற்று 5-வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்தது.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் காலையில் குறைந்த அளவு அரசு பஸ்களே இயங்கின. அதே போன்று சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்தும் குறைந்த அரசு பஸ்களே இயங்கின. மதியத்தில் இருந்து அதிக அளவு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் பயணிகள் குறைந்த அளவே இருந்தனர். 50 சதவீதத்திற்கு மேல் அரசு பஸ்கள் நேற்று இயங்கின. இதில் தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் பலர் பஸ்களை இயக்கி சென்றனர். புதிதாக நியமிக்கப்பட்ட டிரைவர்கள் அதிக பட்சம் 150 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள ஊர்களுக்கு மட்டுமே பஸ்களை இயக்கி செல்ல அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி அவர்கள் அந்தந்த ஊர்களுக்கு சென்று பின்னர் திருச்சிக்கு பஸ்சை இயக்கி வந்தனர்.

இதனால் பெரும்பாலான பயணிகள் தனியார் மற்றும் ஆம்னி பஸ்கள் மூலமே சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களுக்கு சென்றனர். இதனால் தனியார், ஆம்னி பஸ்களில் நேற்றும் கூட்டம் அலைமோதியது. பல பஸ்களில் வழக்கத்தை விட அதிக அளவு கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். மாநகர் பகுதியில் அரசு டவுன் பஸ்கள் குறைந்த அளவே இயக்கப்பட்டன. அதிக அளவு தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் தனியார் டவுன் பஸ்களிலும் கூட்டம் அலைமோதியது. மாநகர் பகுதியில் குறைந்த அளவு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டதால் அரசு பஸ்சில் இலவச பயண அட்டையில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் நேற்று பாதிப்படைந்தனர்.

இந்தநிலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள தொழிலாளர்கள் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கூறி காலை 10 மணியில் இருந்து கூடத் தொடங்கினர். 11.30 மணி அளவில் ஏராளமானவர்கள் அங்கு கூடினர். முன்னதாக அவர்கள் பெரியமிளகுபாறையில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் அருகில் கூட முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதன்பிறகு அவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகில் கூட்டமாக கூடினர். பின்னர் போலீசார் அங்கு கூடியிருந்த தொழிலாளர்களிடம் ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது செய்வோம் என்று எச்சரித்தனர். அதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் போலீசாருக்கும், அவர்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு, விட்டு அங்கு கூடியிருந்த தொழிலாளர்கள் கும்பல், கும்பலாக கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story