தூத்துக்குடியில் காணாமல் போன வாலிபர் காருக்குள் பிணமாக மீட்பு


தூத்துக்குடியில் காணாமல் போன வாலிபர் காருக்குள் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 9 Jan 2018 4:45 AM IST (Updated: 9 Jan 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் காணாமல் போன வாலிபர் காருக்குள் பிணமாக மீட்கப்பட்டார். காரில் இருந்து இறங்கி சென்ற 2 பேர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி டி.எம்.பி. காலனி 6-வது தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மகன் பொன்ராஜ் (வயது 26). இவர் தூத்துக்குடி அண்ணாநகரில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் விற்பனையாளராக உள்ளார். கடந்த 6-ந் தேதி பொன்ராஜ் நெல்லைக்கு செல்வதாக கூறிவிட்டு தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால், அவருடைய பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து பொன்ராஜின் தாயார் சக்திகனி தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகில் பொன்ராஜின் கார் நிற்பதை அவருடைய உறவினர் ஒருவர் பார்த்து உள்ளார். காருக்குள் அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சி அடைய செய்தது. அதாவது, காரின் பின் இருக்கையில் பொன்ராஜ் மயங்கிய நிலையில் கிடந்தார். அவருடைய கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன. காதின் பின்பகுதியில் லேசான காயமும் இருந்தது.

உடனடியாக பொன்ராஜை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பொன்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து தென்பாகம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பொன்ராஜின் கார் நின்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது, அந்த கார் நேற்று முன்தினம் காலையில் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. காரை நிறுத்திய பிறகு அதில் இருந்து 2 பேர் இறங்கி சென்று உள்ளனர். இதனால் பொன்ராஜை மர்ம நபர்கள் 2 பேர் சேர்ந்து கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த 2 பேர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

ஆனால் கொலை எவ்வாறு நடந்துள்ளது என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. முகத்தில் ஏதேனும் பொருளை வைத்து அழுத்தி மூச்சுத்திணற செய்து கொலை செய்தார்களா, மயக்க மருந்து கொடுத்து கொலை செய்தார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் பிரேத பரிசோதனையிலும் முழுமையான விவரங்கள் தெரியவில்லை. இதனால் பொன்ராஜின் உடல் உள்உறுப்புகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. 

Next Story