சேலம் கோட்டத்தில் தகுதியான 750 மாற்று டிரைவர்கள், கண்டக்டர்கள் நியமனம் கலெக்டர் ரோகிணி தகவல்


சேலம் கோட்டத்தில் தகுதியான 750 மாற்று டிரைவர்கள், கண்டக்டர்கள் நியமனம் கலெக்டர் ரோகிணி தகவல்
x
தினத்தந்தி 9 Jan 2018 4:30 AM IST (Updated: 9 Jan 2018 2:41 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கோட்டத்தில் தகுதியான 750 மாற்று டிரைவர்கள், கண்டக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.

சேலம்,

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி நேற்று 5–வது நாளாக சேலம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் பயணிகள் பாதிப்பு அடையாமல் பஸ்கள் இயக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்யும் வகையில் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் மற்றும் எருமாபாளையம் பஸ் பணிமனைகளில் கலெக்டர் ரோகிணி நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

சேலம் மாவட்டத்தில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு 95 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதை தடுக்கும் வகையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சேலம் கோட்டமான நாமக்கல், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 750 மாற்று டிரைவர்கள், கண்டக்டர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பயணிகள் பாதிக்கப்படாத வகையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், அரசு போக்குவரத்து அலுவலர்கள் ஆகியோர் போலீசாருடன் இணைந்து 24 மணி நேரமும் போக்குவரத்தை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாண்மை இயக்குனர் பாண்டி, பொதுமேலாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி குழந்தைகள், பயணிகளின் பாதுகாப்பு குறித்து அரசு போக்குவரத்து துறை உயர் அலுவலர்கள், போலீஸ் அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆகியோருடன் கலெக்டர் ரோகிணி ஆலோசனை மேற்கொண்டார்.


Next Story