பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு பண்ணை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு பண்ணை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்,
தமிழ்நாடு அரசு பண்ணை மற்றும் பல்கலைக்கழக பண்ணை தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை ரெயில் நிலையம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் அரசப்பன் தலைமை தாங்கினார். செல்வராஜ், மணிமேகலை, கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை மாநில தலைவர் சந்திரகுமார் தொடங்கி வைத்தார். ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் மூர்த்தி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் அரசு வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பயிறு வகை பண்ணைகளில் பணிபுரிந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய தகுதியானவர்கள் என அரசால் பட்டியலிடப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் அரசு பண்ணை தொழிலாளர்களை சட்டமுறைப்படி பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஆண்டுக்கு 180 நாட்களுக்கு மேல் பண்ணை தொழிலாளர்களுக்கு பணி வழங்கக்கூடாது என்ற சட்ட விரோத, தொழிலாளர் விரோத உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
தோட்டக்கலைத்துறை, பல்கலைக்கழக பண்ணைகளில் ஒரே வேலையை செய்யும் நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையான சம்பளத்தை தினக்கூலி தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் 5–ந்தேதிக்குள் சம்பளம் வழங்கவேண்டும். கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். கலெக்டர் மூலம் குறைந்தபட்ச கூலியை நிர்ணயம் செய்ய வேண்டும். வருங்கால வைப்புநிதி பிடித்தம் செய்ய வேண்டும். போனஸ், பணிக்கொடை நிதி ஆகியவை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.