பெங்களூருவில் பரிதாபம் மதுபான விடுதியில் ‘தீ’; 5 பேர் கருகி சாவு


பெங்களூருவில் பரிதாபம் மதுபான விடுதியில் ‘தீ’; 5 பேர் கருகி சாவு
x
தினத்தந்தி 9 Jan 2018 5:15 AM IST (Updated: 9 Jan 2018 3:46 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் மதுபான விடுதியில் நடந்த தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி பலியானார்கள். அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மந்திரி கே.ஜே.ஜார்ஜ் அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள கேளிக்கை விடுதியில் கடந்த ஆண்டு(2017) டிசம்பர் 29-ந் தேதி நடந்த தீ விபத்தில் 14 பேர் உடல் கருகி பலியானார்கள். இதையடுத்து, பெங்களூருவில் உள்ள கேளிக்கை மற்றும் மதுபான விடுதிகளில் தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சியும், தீயணைப்பு துறையும் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும் பெங்களூருவில் உள்ள கேளிக்கை, மதுபான விடுதிகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் உள்ளதா? என்று மாநகராட்சி அதிகாரிகள், தீயணைப்பு படையினர் ஆய்வு நடத்தினார்கள்.

இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள மதுபான விடுதியில் நடந்த தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி உயிர் இழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

பெங்களூரு சிட்டி மார்க்கெட் அருகே உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் தரைதளம் மற்றும் முதல் மாடியில் கைலாஷ் என்ற பெயரில் மதுபான விடுதி உள்ளது. இந்த மதுபான விடுதியின் உரிமையாளர் தயாசங்கர் ஆவார். இங்கு 5 பேர் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தார்கள். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் மதுபான விடுதியிலேயே ஊழியர்கள் படுத்து தூங்கினார்கள். இந்த நிலையில், நேற்று அதிகாலை 2.30 மணியளவில் மதுபான விடுதியில் திடீரென்று தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென மதுபான விடுதி முழுவதும் பரவி எரிந்தது. இதனால் கரும்புகை வெளியேறியது.

உடனே தூங்கிக் கொண்டிருந்த ஊழியர்கள் பதறியபடி எழுந்தார்கள். பின்னர் மதுபான விடுதிக்குள் இருந்து தப்பித்து வெளியே வர அவர்கள் முயன்றார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதற்கிடையில், மதுபான விடுதியில் இருந்து புகை வெளியேறுவதை சிட்டி மார்க்கெட் பகுதிக்கு வந்திருந்த வியாபாரிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். இதுபற்றி அவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார்கள். உடனே 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மதுபான விடுதியில் பிடித்த தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தார்கள்.

ஆனால் அங்கிருந்த மதுபானங்களில் தீப்பிடித்துக் கொண்டதால் தீ அணையாமல் எரிந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து, பக்கத்து கட்டிடங்களுக்கு தீ பரவாமல் தீயணைப்பு படையினர் பார்த்து கொண்டனர். பின்னர் 3 மணிநேரத்திற்கும் மேலாக போராடி மதுபான விடுதியில் பிடித்த தீயை தீயணைப்பு படைவீரர்கள் அணைத்தார்கள். அதன்பிறகு, அவர்கள் உள்ளே சென்று பார்த்தார்கள். அப்போது 2 பேர் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார்கள். மேலும் மதுபான விடுதியில் இருந்த கழிவறைக்குள் 3 பேர் பலத்த தீக்காயங்களுடன் பிணமாக கிடப்பதை கண்டு தீயணைப்பு படைவீரர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கலாசி பாளையம் போலீசார் மற்றும் துணை போலீஸ் கமிஷனர் அனுஜித் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் நேற்று காலையில் போலீஸ் கமிஷனர் சுனில்குமார், பெஸ்காம்(மின்வாரியம்) அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பலியான 5 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

போலீஸ் விசாரணையில், தீ விபத்தில் பலியானவர்கள் துமகூரு மாவட்டத்தை சேர்ந்த ரங்கசாமி(வயது 23), பிரசாத்(20), மகேஷ்(35), ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுநாத்(45), மண்டியா மாவட்டத்தை சேர்ந்த கீர்த்தி(24) என்று தெரியவந்தது. இவர்கள் 5 பேருக்கும், அதே கட்டிடத்தில் தங்க அறைகள் இருந்தும், நேற்று முன்தினம் இரவு மதுபான விடுதியிலேயே படுத்து தூங்கியுள்ளனர். தீ விபத்து நடந்ததும் 5 பேரும் வெளியே தப்பித்து வர முயன்றுள்ளனர். ஆனால் கதவை திறக்க முடியாத காரணத்தாலும், அங்கு தீ அதிகஅளவில் எரிந்ததாலும் அவர்களால் வெளியே வரமுடியாமல் போனதால் உடல் கருகியும், மூச்சு திணறியும் பலியானது தெரியவந்தது.

மேலும் மதுபான விடுதியில் எந்த விதமான பாதுகாப்பு வசதிகள் இல்லை என்பதும் தெரிந்தது. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக மதுபான விடுதியில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும் வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து தீயணைப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தீ விபத்து நடந்த மதுபான விடுதிக்கு மந்திரிகள் ராமலிங்கரெட்டி, கே.ஜே.ஜார்ஜ், மாநகராட்சி மேயர் சம்பத்ராஜ், மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத், தீயணைப்பு துறை போலீஸ் டி.ஜி.பி.யான எம்.என்.ரெட்டி, ஜமீர் அகமதுகான் எம்.எல்.ஏ, அந்த பகுதியின் மாநகராட்சி கவுன்சிலரான பிரதீபா தனராஜ் ஆகியோர் வந்து பார்வையிட்டனர். பின்னர் தீ விபத்து குறித்த காரணங்கள் பற்றியும், பலியானவர்கள் குறித்தும் மந்திரிகள் ராமலிங்க ரெட்டி, கே.ஜே.ஜார்ஜ் ஆகியோர் கேட்டு அறிந்து கொண்டார்கள். மேலும் விக்டோரியா ஆஸ்பத்திரியில் பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்தும் அவர்கள் ஆறுதல் கூறினார்கள்.

பின்னர் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் நிருபர்களிடம் கூறுகையில், “மதுபான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியானது துரதிர்ஷ்டவசமானது. தீ விபத்து நடந்த கட்டிடம் மிகவும் பழமையானதாகும். அங்கு உரிய பாதுகாப்பு வசதிகள் இருந்ததா?, விதிமுறைகளை மீறி உள்ளார்களா? என்பது குறித்து தீயணைப்பு படையினர், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையின் முடிவில் இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் மாநகராட்சி சார்பில் நிவாரணம் வழங்கப்படும்,“ என்றார்.

இதுபோன்று, மதுபான விடுதி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாகவும் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1½ லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சுனில்குமார் கூறும் போது, ‘மதுபான விடுதியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்து தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு தகவல்களை சேகரித்துள்ளனர். மதுபான விடுதியின் உரிமையாளர், மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்றார்.

தீ விபத்து நடந்ததும் மதுபான விடுதியின் உரிமையாளர் தயாசங்கர் தலைமறைவாகிவிட்டார். அவரை நேற்று மாலையில் கலாசிபாளையம் போலீசார் கைது செய்தார்கள். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பலியானவர்களின் உடல்கள் நேற்று மாலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களது உடல்களை பார்த்து அவர்களுடைய உறவினர்களும், குடும்பத்தாரும் கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. இதுகுறித்து கலாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பெங்களூருவில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Next Story