காஞ்சீபுரம் அருகே வாகனம் மோதி ஓட்டல் மேலாளர் பலி
காஞ்சீபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஓட்டல் மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் அருகே கீழம்பி பஜனைகோவில் தெருவில் வசித்து வந்தவர் ஸ்ரீதர்(வயது 36). இவர், வேடலில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் மேலாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
ஸ்ரீதர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து ஓட்டலுக்கு சென்றுகொண்டிருந்தார். காஞ்சீபுரம் அருகே சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கீழம்பி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வேலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஸ்ரீதர் மீது அந்த வாகனத்தின் சக்கரம் ஏறி இறங்கியது. சக்கரத்தில் சிக்கிய ஸ்ரீதர், தலை நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த பாலுச்செட்டிச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் மற்றும் போலீசார் பலியான ஸ்ரீதர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுப்பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.