பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வேன்டிரைவர் பலி ஏரல் அருகே பரிதாப சம்பவம்
ஏரல் அருகே, பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்கு உள்ளானதில், வேன் டிரைவர் பரிதாபமாக பலியானார்.
ஏரல்,
ஏரல் அருகே, பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்கு உள்ளானதில், வேன் டிரைவர் பரிதாபமாக பலியானார்.
வேன் டிரைவர்ஸ்ரீவைகுண்டம் அருகே கீழ நலங்குடி இசக்கியம்மாள்புரத்தை சேர்ந்தவர் அப்பாவு என்ற அந்தோணிமுத்து. இவருடைய மகன் அலெக்ஸ் பாண்டியன் (வயது 30). இவர், தன்னுடைய மைத்துனரான ஆழ்வார்திருநகரி கேம்பலாபாத்தைச் சேர்ந்த சேர்மத்துரையிடம் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.
பாலத்தின் தடுப்பு சுவரில்...நேற்று முன்தினம் இரவில் அவர், ஏரலில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு, மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஏரல் அருகே மேல மங்களகுறிச்சி அருகில் சென்றபோது அங்குள்ள வடிகால் பாலத்தின் தடுப்பு சுவரில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் இறந்த அவருடைய உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு ஞானசெல்வி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.