கல்வி கற்பதை வாழ்நாள் கடமையாக கொள்ள வேண்டும், ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு
வேலூர் ஈ.வெ.ரா.நாகம்மை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்வி கற்பதை வாழ்நாள் கடமையாக கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு ரெயில்வே காவல்துறை கூடுதல் இயக்குனர் சைலேந்திரபாபு தெரிவித்தார்.
வேலூர்,
தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் பன்னாட்டு அரிமா சங்கங்கள் இணைந்து வேலூர் ஈ.வெ.ரா. நாகம்மை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கான ‘சிகரம் தொடு’ என்ற கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ரெயில்வே காவல்துறை கூடுதல் இயக்குனர் சைலேந்திரபாபு கலந்து கொண்டார். பள்ளி தலைமை ஆசிரியை காயத்திரிதேவி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் அவர் ‘‘மாணவர்கள் எவ்வாறு படிக்க வேண்டும், எவ்வாறு படித்தால் வெற்றி பெறலாம். வெற்றி பெற்றால் யாருக்கெல்லாம் பயன்’’ என்பது குறித்து எடுத்துரைத்தார். உலகில் சாதனை படைத்த பெண்மணிகள் குறித்த முக்கிய தகவல்களை அவர் படக்காட்சியாக மாணவிகளுக்கு விளக்கி கூறினார். மேலும் மாணவிகளிடம் பல்வேறு பொது அறிவு குறித்து கேள்விகள் கேட்டு அதில் பதில் கூறியவர்களுக்கு அவர் எழுதிய புத்தகங்களை பரிசாக வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:–
கல்வியை முறையாக படித்தால் நல்ல சமுதாயம் உருவாகும். பெண்கள் நீங்கள் படித்து வாழ்வில் வெற்றி பெற்று பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும். படிப்பதற்கு மொழி தடையல்ல. ஆங்கிலம் என்பது ஒரு மொழி தான். அதை கண்டு அஞ்ச வேண்டாம். முறையான கல்வி நல்ல சமுதாயத்தை உருவாக்கும். உலக அளவில் பல்வேறு துறைகளில் பெண்கள் சாதித்து வருகின்றனர். இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி பயணித்தால் வெற்றி நிச்சயம். கல்வியை நிறுத்தி விடாதீர்கள். படிப்பதை வாழ்நாள் கடமையாக கொள்ள வேண்டும். நோக்கம் பெரியதாக இருக்க வேண்டும். பள்ளியில் கற்றுக்கொடுப்பதை வீட்டிற்கு சென்று ஒரு முறை படிக்க வேண்டும். அறிவியல் பாடங்களை புத்தகத்தில் மட்டும் இருப்பதை படிக்காமல் அதை செயல்முறையாக கற்று மனவோட்டத்தில் சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் தேர்வின் போது படித்தவை மறந்து விட்டால் செயல்முறை சிந்திப்பு அந்த நேரத்தில் தேர்வெழுத உதவும்.
இவ்வாறு அவர் பேசினார்.