ரூ.25 லட்சம் லஞ்சம் மத்திய கலால் வரித்துறை அதிகாரி உள்பட 3 பேர் கைது


ரூ.25 லட்சம் லஞ்சம் மத்திய கலால் வரித்துறை அதிகாரி உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2018 2:53 AM IST (Updated: 10 Jan 2018 2:53 AM IST)
t-max-icont-min-icon

லஞ்ச வழக்கில் மத்திய கலால் மற்றும் சுங்க வரித்துறை அதிகாரி உள்பட 3 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை ஜி.எஸ்.டி. மத்திய கலால் மற்றும் சுங்க வரித்துறை அலுவலகத்தில் சூப்பிரண்டாக பணிபுரிந்து வருபவர், எஸ்.கே.சுவாமிநாதன். இவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை காரணமாக உதவி கமிஷனர் ஆக பதவி உயர்வு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால், டெல்லியில் நிதி அமைச்சகத்தின் வடக்கு பிளாக்கில் உள்ள மத்திய கலால் மற்றும் சுங்க வரித்துறை உயர் அதிகாரி ஆசிஷ் தாக்குரை தொடர்பு கொண்டு, தன்னுடைய பதவி உயர்வு கோப்புகளின் மீது சாதகமாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

இதற்கு ஒப்புக்கொண்ட ஆசிஷ் தாக்குர், தனக்கு ரூ.50 லட்சம் லஞ்சம் தந்தால், பதவி உயர்வு மீது சாதகமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும், மும்பையில் தனக்கு வேண்டப்பட்ட ரவீந்திர குமார் மண்டல் என்பவர், மூலம் லஞ்ச பணத்தை கொடுக்குமாறு அறிவுறுத்தினார். இதற்கு சம்மதம் தெரிவித்த எஸ்.கே.சுவாமிநாதன், ரவீந்திர குமார் மண்டலை சந்தித்து முதற்கட்டமாக ரூ.25 லட்சம் கொடுத்தார். பணத்துடன் ரவீந்திர குமார் மண்டல் டெல்லி நோக்கி புறப்பட்டார்.

இதனிடையே, இதுபற்றி அறிந்த சி.பி.ஐ. அதிகாரிகள், குறுக்கு வழியில் பதவி உயர்வு பெற நினைத்த எஸ்.கே.சுவாமிநாதனையும், அவருக்கு உதவிய ரவீந்திர குமார் மண்டலையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், மத்திய கலால் மற்றும் சுங்க வரித்துறை அதிகாரி ஆசிஷ் தாக்குர் டெல்லியில் சிக்கினார். 3 பேரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

லஞ்ச வழக்கில் உயர் அதிகாரிகள் கைதாகி இருப்பது கலால் மற்றும் சுங்க வரித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story