நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி அதிகாரிகளுக்கு நிதி அதிகாரம்


நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி அதிகாரிகளுக்கு நிதி அதிகாரம்
x
தினத்தந்தி 10 Jan 2018 3:13 AM IST (Updated: 10 Jan 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி அதிகாரிகளுக்கு நிதி அதிகாரம் அளிக்கும் தீர்மானத்துக்கு மராட்டிய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

மும்பை,

மராட்டியத்தில் நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிக்கு கடந்த ஆண்டு நேரடி தேர்தல் முறை அறிமுகமானது. எனினும், நகராட்சி ஒப்புதல் அளிக்கும் தீர்மானங்கள் மாநில அரசின் கொள்கை, திட்டங்கள் மற்றும் சட்ட வரைமுறைக்கு உட்படவில்லை என்றால், அதனை ரத்து செய்யும் அதிகாரம் நகராட்சி தலைமை செயல் அதிகாரியிடம் இருந்தது.

இதனை நீக்கி, சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு நகராட்சி தலைவருக்கு நிதி அதிகாரம் அளிக்கும் வகையிலான தீர்மானத்துக்கு மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்தது. அதன்படி, நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி, நகர பஞ்சாயத்து தலைவரை, அவர் பதவியில் அமர்ந்து முதல் 2½ ஆண்டுகாலத்துக்கு தகுதிநீக்கம் செய்ய இயலாது.

அதன்பின்னர், மோசமான நடத்தையை காரணம் காட்டி வேண்டுமானால், அவரை தகுதிநீக்கம் செய்யுமாறு கவுன்சிலர்கள் கோரலாம்.

மேலும், அவரது நடத்தை குறித்து மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி, மாநில அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க இந்த விதிமுறை வழிவகை செய்கிறது. நகராட்சி, நகர பஞ்சாயத்து தலைவரை தகுதிநீக்கம் செய்யும் அதிகாரம் மாநில அரசிடமே உள்ளது.

இது மட்டுமின்றி, இந்த திருத்தப்படி, இரண்டு மாதத்துக்கு ஒருமுறை நடைபெறும் நகராட்சி பொது குழு கூட்டத்தை இனி மாதந்தோறும் நடத்த வேண்டும். இந்த கூட்டங்களில், தலைமை செயல் அதிகாரியின் கருத்துகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

பொதுக்குழு கூட்டம் எத்தனை நிமிடங்கள் நடைபெற வேண்டும் என்பதற்கான கால வரையறை இன்னும் 7 நாட்களுக்குள் இறுதி செய்யப்பட்டு, நகராட்சி இணையதள பக்கத்தில் வெளியிடப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.


Next Story