6-வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்


6-வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 10 Jan 2018 4:30 AM IST (Updated: 10 Jan 2018 4:01 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து தொழிலாளர்கள் 6-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தினர். இதை பயன்படுத்தி ஷேர் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் தவித்து வருகின்றனர்.

சென்னை,

ஊதிய உயர்வு பிரச்சினையில் உடன்பாடு ஏற்படாததால் தமிழகம் முழுவதும் கடந்த 4-ந்தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தனியார் பஸ்களுக்கு அனுமதி அளித்தும், தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை நியமித்து அரசு பஸ்களை இயக்கியும் போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் 6-வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. சென்னையில் கோயம்பேடு, பிராட்வே, சைதாப்பேட்டை, தியாகராயநகர் என நகரின் முக்கிய பஸ் நிலையங்களில் இருந்து குறைவான அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டன. தேவை கருதி தனியார் பஸ்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளன.

பெரும்பாலான மாநகர பஸ்கள் இயங்காததால் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சரியான நேரத்தில் பஸ் கிடைக்காமல் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். பஸ் நிலையங்களிலும், பஸ் நிறுத்தங்களிலும் பஸ்சுக்காக வெகுநேரம் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டது. குறிப்பிட்ட மணி நேர இடைவெளியில் எப்போதாவது வரும் மாநகர பஸ்களில் பயணிகள் ஒருவருக்கொருவர் முந்தியடித்துக்கொண்டு ஏறினர்.

இதனால் பயணிகள் சிலர் ஷேர் ஆட்டோ, கால் டாக்சி, ஆட்டோக்களை பிடித்து, செல்ல வேண்டிய இடத்துக்கு புறப்பட்டு சென்றனர். கால் டாக்சிகளில் குழுவாகவும் சிலர் முன்பதிவு செய்து கட்டணத்தை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். இதேபோல ஒரே இடத்தில் உள்ள அலுவலகங்களுக்கு செல்பவர்களும் ஆட்டோ கட்டணத்தை பகிர்ந்து பயணம் செய்தனர்.

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேளையில் புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக கிடைக்கும் வாகனங்களில் தியாகராயநகர் பகுதிக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். பொருட்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக பஸ் நிலையத்துக்கு செல்பவர்கள் பஸ் கிடைக்காமல் திணறி வருகின்றனர். வேறு வழியின்றி அதிக கட்டணம் கொடுத்து கால் டாக்சிகள், ஆட்டோக்களில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

பொதுமக்களின் தவிப்பை உணர்ந்து கொண்ட ஷேர் ஆட்டோக்களும் தங்கள் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி வருகின்றனர். எப்படியும் வீட்டுக்கு போக வேண்டும் என்பதால் கேட்ட தொகையை கொடுத்து மக்களும் பயணம் செய்கின்றனர். எப்போது இந்த போராட்டம் ஓயுமோ? என்ற மனக்கவலையுடன் பொதுமக்கள் உள்ளனர்.

Next Story