லாரி சக்கரத்தில் சிக்கி மாணவன் பலி அண்ணன் காயம்
லாரி சக்கரத்தில் சிக்கி மாணவன் பலியானான். அண்ணன் காயம் அடைந்தான்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் நந்திவரம்–கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் கோபால். இவரது மகன்கள் அரவிந்த் (வயது 12), தருண்(4). இவர்களில் அரவிந்த் கூடுவாஞ்சேரியில் உள்ள பாரதியார் மெட்ரிக் பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வருகிறான். தருண் அதே பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல அரவிந்த் தனது தம்பி தருணை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கூடுவாஞ்சேரியில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு சென்றுக்கொண்டிருந்தான்.
அப்போது காயரம்பேட்டில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி வேகமாக சென்ற டிப்பர் லாரி கண் இமைக்கும் நேரத்தில் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் சைக்கிளில் இருந்து அரவிந்த், தருண் இருவரும் கீழே விழுந்தனர். லாரி சக்கரத்தில் சிக்கிய தருண் படுகாயம் அடைந்தான். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் தருண் பரிதாபமாக உயிரிழந்தான். காயம் அடைந்த அரவிந்த் பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.
இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.