தூத்துக்குடி மாநகரில் வீடுகளில் மாடித் தோட்டம் அமைக்கும் திட்டம்
தூத்துக்குடி மாநகராட்சியில் வீடுகள் தோறும் மாடித்தோட்டம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகராட்சியில் வீடுகள் தோறும் மாடித்தோட்டம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மாடித்தோட்டம்தூத்துக்குடி மாவட்ட மகளிர் திட்டம் மூலம், மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் மாடித் தோட்டம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக மகளிர் சுயஉதவிக்குழுவில் ஆர்வம் உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்றவர்கள் மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மாதிரி மாடித் தோட்டம் அமைத்தனர். இதில் பல்வேறு வகையான கீரைகள் பயிரிடப்பட்டு உள்ளன.
திறப்பு விழாஇந்த மாடித்தோட்டம் திறப்பு விழா நேற்று காலை மேற்கு மண்டல அலுவலகத்தில் நடந்தது. விழாவுக்கு மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் ரேவதி தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மாடித்தோட்டம் பயிற்றுனர் தனலட்சுமி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் கலந்து கொண்டு மாடித் தோட்டத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன்சுரேஷ் பொன்னையா, தொழில் பயிற்சி நிறுவன இயக்குனர் துரைசாமி, மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்றுநர் ராஜாத்தி நன்றி கூறினார்.
பார்வையிடலாம்பின்னர் ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் கூறும் போது, ‘தூத்துக்குடி மாநகர மக்கள் சத்தான, இயற்கையான கீரை உள்ளிட்ட காய்கறிகளை சாப்பிட வேண்டும். இதற்காக மாடித்தோட்டம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இத்தோட்டம் அமைக்கும் போது, வீடுகளில் உள்ள மக்கும் கழிவுகளை உரமாக மாற்றி பயன்படுத்தும் திட்டமாகவும் இது அமைந்து உள்ளது.
மாநகர மக்கள் வீடுகளில் மாடித் தோட்டம் அமைப்பது குறித்த விவரங்களை அறிய விரும்பினால், மேற்கு மண்டல அலுவகத்துக்கு வரலாம். அங்கு மகளிர் சுய உதவிக்குழுவினரின் உதவிமையம் அமைந்து உள்ளது. அவர்கள் மாடித்தோட்டம் குறித்து விளக்கம் அளிப்பார்கள். வீடுகளில் மாடித் தோட்டம் அமைப்பதற்கு பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளனர். அவர்களே வீடுகளுக்கு வந்து தோட்டம் அமைத்தும் தருவார்கள். அதற்கு உரிய கட்டணம் வசூலிக்கப்படும். இது மகளிர் சுய உதவிக்குழுவினருக்கும் வருவாய் ஈட்டும் திட்டமாகும். இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று கூறினார்.