வெள்ளைக்கல் தட்டுப்பாட்டால் சுண்ணாம்பு தயாரிப்பு தொழில் முடக்கம்
திருமங்கலம், பேரையூர் பகுதிகளில் வெள்ளைக்கல் தட்டுப்பாட்டால் சுண்ணாம்பு தயாரிப்பு தொழில் முடக்கம் அடைந்து உள்ளது.
திருமங்கலம்,
தமிழகத்தில் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு பண்டிகை நாட்களில் அனைவரும் தங்களது வீடுகளில் வெள்ளையடித்து சிவப்பு நிற காவி பட்டை அடிப்பது வழக்கம். அதற்கென பண்டிகை சமயங்களில் சுண்ணாம்புக் கல் தயாரித்து விற்பனை அமோகமாக நடக்கும். அது குடிசை தொழில். ஆனால் தற்போதைய கால கட்டத்தில் சுண்ணாம்பு கல் விற்பனை குறைய தொடங்கி விட்டது. அதன் தயாரிப்பும் வீழ தொடங்கி விட்டது. காரணம் பெயிண்ட் என்ற வர்ணங்கள் அதிக அளவில் வந்து விட்டன. மேலும் வீடுகளும் நவீனமாகி வருகிறது.
இருப்பினும் பெயிண்ட் பூச விருப்பம் இல்லாதவர்களும், மண் மற்றும் பழைய காரை வீடுகளில் குடியிருப்பவர்களும் சுண்ணாம்புக் கல் வாங்கி அதை தண்ணீரில் போட்டு நீர்த்தி வீட்டில் வெள்ளை வர்ணம் பூசுகின்றனர். தற்போதைய சூழலில் சுண்ணாம்புக் கல் தயாரிக்கும் காளவாசல் என்ற தொழில் நசிந்து அழியத் தொடங்கி விட்டது. சுண்ணாம்புக் கல் தயாரிக்க வெள்ளைக்கல் தேவைப்படுகிறது. வெள்ளைக்கல் திருமங்கலம், பேரையூர், உசிலம்பட்டி தாலுகாக்களில் கிடைக்கிறது. தற்போது அரசு கல் குவாரிகளுக்கு தடை விதித்துள்ளதால் கல் கிடைக்காமல் சுண்ணாம்பு தயாரிக்கும் தொழில் நலிவடைந்து போய் விட்டது.
இது குறித்து சுண்ணாம்புக் கல் தயாரிக்கும் தொழில் செய்து வரும் சந்திரசேகரன் (56) என்பவர் கூறியதாவது:–
திருமங்கலம் தாலுகாவில் 20 சுண்ணாம்பு காளவாசல்கள் இருந்தன. தற்போது 2 காளவாசல்கள் தான் உள்ளன. காரணம் அரசின் கெடுபிடியால் வெள்ளைக் கல் கிடைக்க வில்லை. ஒரு வருடத்திற்கு முன்பு வாங்கிய கல்லை வைத்து சிறிய அளவில் சுண்ணாம்பு கல் வேக வைத்து விற்பனை செய்கிறோம். சுண்ணாம்பு கல் மற்றும் கோலப்பொடி தயாரிக்கும் தொழிலை செய்தவர்கள் தற்போது வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
வெற்றிலை போட வேண்டும் என்றால் சுண்ணாம்பு தேவை. கோலம் போட வெள்ளைப் பொடி தேவை. அதற்கான மூலப் பொருள் வெள்ளை கல். அதற்கு தட்டுப்பாடு ஏற்படும் போது வெற்றிலை போடுபவர்கள், சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலை பாக்கை மட்டுமே சுவைக்க வேண்டும். எனவே குடிசை தொழிலாக விளங்கும் சுண்ணாம்பு தயாரிக்கும் தொழில் வீழ்ச்சி அடையாமல் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.