கோவையில் தொழிலாளர் நல அலுவலகத்தை முற்றுகையிட்ட போக்குவரத்து ஊழியர்கள்
கோவையில் தொழிலாளர் நல அலுவலகத்தை போக்குவரத்து ஊழியர்கள் முற்றுகையிட்டனர்.
கோவை,
கோவை மாவட்டத்தில் நேற்று 7–வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் நீடித்தது. இந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர்கள் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்து இருந்தனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தொழிலாளர் நல அலுவலகத்தை முற்றுகையிட போக்குவரத்து ஊழியர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் அலுவலகத்திற்குள் நுழைந்து விடாமல் இருக்க இரும்புத்தடுப்புகளை போலீசார் அமைத்து இருந்தனர். இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் தரையில் உட்கார்ந்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த அருணகிரிநாதன், காளியப்பன், எல்.பி.எப். தொழிற் சங்கத்தை சேர்ந்த ரத்னவேல், பெரியசாமி, ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தை சேர்ந்த சண்முகம், செல்வராஜ், பணியாளர் சங்கத்தை சேர்ந்த இளங்கோ, எச்.எம்.எஸ். சங்கத்தை சேர்ந்த மதியழகன், ராஜா, எம்.எல்.எப். சங்கத்தை சேர்ந்த குமரன், ஐ.என்.டி.யு.சி. சங்கத்தை சேர்ந்த தவுலத்கான் உள்பட தொழிற் சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் என 500–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பேராட்டம் குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:–
அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசு பணிமனைகளில் வேலைகள் நடக்க வில்லை. தற்காலிக பணியாளர்களை முறையாக எடுக்கவில்லை. 3 வருட பயிற்சி முடித்தவர்களுக்கு தான் கனரக வாகனம் ஓட்ட அனுமதி வழங்க வேண்டும். அவசர கதியில் தற்காலிக பணியாளர்களை பணிக்கு எடுப்பதால் விபத்து நிகழ்கிறது.
ஒரு பஸ் 15 வருடங்களுக்கு மேலாக இயக்கப்பட்டு வருகிறது. அதன் செயல்திறன் குறித்து அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு தான் தெரியும். எனவே தான் தற்காலிக டிரைவர்கள் இயக்கும் பஸ்கள் விபத்தில் சிக்குகின்றன. இதன் காரணமாக அரசு பஸ்சில் ஏற பொதுமக்கள் அச்சம் அடைகிறார்கள். பொங்கல் பண்டிகைக்கு முன்பு போக்குவரத்து தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.