தனியார் பஸ் ஊழியரின் சட்டையை கிழித்ததற்கு பழிக்குப்பழி: நடுரோட்டில் கால் டாக்சி டிரைவருக்கு அடி–உதை
கோவையில் தனியார் பஸ் டிரைவரின் சட்டை கிழிக்கப்பட்டதற்கு பழிக்குப்பழியாக, நடுரோட்டில் கால் டாக்சி டிரைவருக்கு அடி–உதை விழுந்தது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தும் போலீசார் வரவில்லை.
கோவை,
கோவை 100 அடி சாலையில் நேற்றுபகலில் நடந்த இந்த பரபரப்பான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி தனியார் பஸ் ஒன்று கோவை 100 அடி சாலையில் நேற்று பகல் 12.15 மணியளவில் வந்து கொண்டு இருந்தது. அந்த பஸ்சுக்கு பின்னால் ஒரு கால் டாக்சி வந்து கொண்டிருந்தது. கால் டாக்சி டிரைவர் பஸ்சை முந்தி செல்வதற்காக நீண்ட நேரமாக ஹாரன் அடித்தபடி வந்தார். ஆனால் அந்த பஸ் டிரைவர் வழிவிட வில்லை. 9–வது விரிவு சாலை அருகே வந்ததும் கால் டாக்சி டிரைவர், தனியார் பஸ்சை முந்தி சென்று மறித்தபடி நிறுத்தினார். இதனால் அந்த ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனால் அது பற்றி கவலைப்படாமல் கால் டாக்சி டிரைவர் காரை விட்டு இறங்கியதும் தனியார் பஸ் டிரைவரை கீழே இழுத்துப்போட்டு சரமாரியாக தாக்கினார். இதில் அவரின் சட்டை தாறுமாறாக கிழிந்தது. இதைபார்த்த அக்கம் பக்கத்தி னர் ஓடிவந்து அவர்களை விலக்கி விட முயன்றனர். ஆனாலும் கால் டாக்சி டிரைவர், தனியார் பஸ் டிரைவரை தொடர்ந்து தாக்கினார்.
நான் நீண்ட நேரமாக ஹாரன் அடித்தும் வழி கொடுக்காமல் வருவதாக கூறி கால் டாக்சி டிரைவர் ஆக்ரோஷமாக சத்தம்போட்டபடி செல்போனில் தனது நண்பர்களை சம்பவ இடத்துக்கு அழைத்தார். இதையடுத்து சட்டை கிழிந்த நிலையில் நின்ற தனியார் பஸ் டிரைவருக்கு ஆதரவாக கண்டக்டர்கள் மற்றும் பஸ் பயணிகள் சிலர் திரண்டனர். அவர்கள் கால்டாக்சி டிரைவரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அவர்களிடமும் அவர் தகராறில் ஈடுபட்டார்.
போக்குவரத்து நிறைந்த 100 அடி சாலையில் பஸ் மற்றும் கால் டாக்சி ஆகியவை நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்டவரிசையில் அணிவகுத்து நின்றன. அப்போது தனியார் பஸ் டிரைவருக்கு ஆதரவாக ஒருவர் வந்து கால் டாக்சி டிரைவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதில் ஆத்திரம் அடைந்த கால் டாக்சி டிரைவர் அவரை அடிக்க பாய்ந்தார். இப்படி ஒருவரையொருவர் அடிக்க பாய்ந்ததால் அந்த இடம் பரபரப்பாக காணப்பட்டது.
அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு மற்றொரு தனியார் பஸ் வந்தது. அந்த பஸ்சில் வந்த 3 கண்டக்டர்களை சட்டை கிழிந்து நின்ற டிரைவர் ‘தன்னை ஒரு கால் டாக்சி டிரைவர் அடித்து சட்டையை கிழித்து கூறி அழைத்தார்.
உடனே அந்த பஸ்சில் இருந்து இறங்கிய கண்டக்டர்கள் கால் டாக்சி டிரைவரிடம், ‘தனியார் பஸ் டிரைவரை எப்படி அடிக்கலாம்’ என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர். அடி வாங்கிய தனியார் பஸ் டிரைவருக்கு ஆதரவாக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பலர் வந்ததால் கால் டாக்சி டிரைவர் பின்வாங்கினார். ஒரு கட்டத்தில் அவர் காரில் ஏறி தப்பிக்க முயன்றார்.
உடனே பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் கால் டாக்சி டிரைவரை காரில் இருந்து வெளியே இழுத்து வந்தனர். பின்னர் அவரை நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கினார்கள். இதையடுத்து கால் டாக்சி டிரைவர் அங்கிருந்து தனது காரை எடுத்துக் கொண்டு தப்பி சென்றார். அதன்பிறகு தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களும் அங்கிருந்து புறப்பட்டனர்.
இந்த பரபரப்பான சம்பவம் மதியம் 12.15 மணி முதல் 1.15 மணி வரை நடந்தது. ஆனால் அந்த சம்பவம் நடந்து முடியும் வரை போலீசார் யாரும் அங்கு வரவில்லை. எல்லோரும் புறப்பட்டு சென்ற பிறகு மதியம் 1.20 மணியளவில் ரோந்து மோட்டார் சைக்கிளில் ஒரு போலீஸ்காரர் வந்தார். ஆனால் அதற்குள் அனைவரும் அங்கிருந்து கிளம்பி சென்று விட்டதால் அவர் திரும்பி சென்று விட்டார்.
கோவை 100 அடி சாலையில் நடந்த அடிதடியால் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்த போதும் ஒரு போலீஸ்காரர் கூட வராதது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.