ஈரோடு மாவட்டத்தில் மீட்டர் கட்டணத்தில் ஆட்டோக்களை ஓட்ட முடிவு கட்டணத்தை உயர்த்த டிரைவர்கள் கோரிக்கை
ஈரோடு மாவட்டத்தில் 14–ந் தேதி முதல் மீட்டர் கட்டணத்தில் ஆட்டோக்களை ஓட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் மீட்டர் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயம் செய்ய டிரைவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஈரோடு,
ஆட்டோ தொழிலாளர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகரிடம் நேற்று கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் ஆட்டோ டிரைவர்கள் கூறிஇருந்ததாவது:–
கடந்த 25–8–2017 அன்று தமிழக அரசு ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை தீர்மானித்தது. அதன்படி 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.25 குறைந்தபட்ச கட்டணமாகவும், கூடுதலாக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.12 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு அறிவித்த இந்த கட்டணம் எங்களுக்கு கட்டுப்படி ஆகாது. எனவே மாவட்டத்தின் தன்மைக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை வைத்தோம். ஆனால் இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல், கியாஸ் உள்ளிட்ட எரிபொருளின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. மேலும், காப்பீடு, சாலை வரி, உரிமக்கட்டணம், தகுதிச்சான்று கட்டணம், ஓட்டுனர் உரிமம் புதிதாக எடுக்கவும், புதுப்பிக்கவும் பலமடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி டயர் போன்ற உதிரிபாகங்களின் விலையும் கடுமையாக உயர்ந்து உள்ளது. இதனால் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு மாநகர் பகுதியில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆட்டோ இயக்குவதற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கஷ்டப்படும் ஆட்டோ டிரைவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. எனவே மீட்டர் கட்டணத்தில் ஆட்டோக்களை ஓட்டுவதற்கு முடிவு செய்து உள்ளோம்.
எரிபொருள் விலையேற்றம் போன்ற காரணங்களினால் மீட்டர் வாடகையை 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.35 என்றும், கூடுதல் கிலோ மீட்டருக்கு ரூ.15 என்றும் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். மேலும், பன்னாட்டு நிறுவனங்களின் ஆட்டோ இயக்கத்தை அனுமதிக்கக்கூடாது.
வருகிற 14–ந் தேதி முதல் ஆட்டோவை மீட்டர் கட்டணத்துடன் இயக்க உள்ளோம். இதற்காக போக்குவரத்துத்துறை மூலம் டிஜிட்டல் மீட்டர் இலவசமாக வழங்க வேண்டும். மீட்டர் கட்டணத்தில் இயக்கும் ஆட்டோ டிரைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.