போக்குவரத்து ஊழியர்கள் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்


போக்குவரத்து ஊழியர்கள் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2018 4:27 AM IST (Updated: 11 Jan 2018 4:27 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் போக்குவரத்து ஊழியர்கள், தொழிலாளர் நல ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,

நிலுவைத்தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலும் போக்குவரத்து தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4–ந்தேதி தொடங்கிய இந்த போராட்டம் நேற்று 7–வது நாளாக நீடித்தது. கோரிக்கைகளை வலியுறுத்தி தினமும் வெவ்வேறு போராட்டங்களை அவர்கள் நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்லில் ஊர்வலம், மவுன போராட்டம், குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து தொழிலாளர் நல ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று, நேருஜி நகர் ரவுண்டானா அருகே போக்குவரத்து ஊழியர்கள் திரண்டனர். பின்னர் அங்கிருந்து, மண்டல தொழிலாளர் நல ஆணையர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

அப்போது, ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனே அமல்படுத்த வேண்டும், தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோ‌ஷங்களை எழுப்பியபடி சென்றனர். இதையடுத்து அவர்கள் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 250 பேர் கலந்துகொண்டனர்.

போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசு பஸ்களை விட, தனியார் பஸ்கள் அதிக அளவு இயக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நேற்றும் தனியார் பஸ்கள் அதிக அளவில் நின்றன. மேலும் பெரும்பாலான அரசு பஸ்கள் தற்காலிக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை கொண்டு தான் இயக்கப்பட்டு வருகின்றன.


Next Story