ஊட்டி அருகே தற்காலிக டிரைவரின் நண்பர் அரசு பஸ்சை ஓட்டியதால் பரபரப்பு


ஊட்டி அருகே தற்காலிக டிரைவரின் நண்பர் அரசு பஸ்சை ஓட்டியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Jan 2018 5:30 AM IST (Updated: 11 Jan 2018 4:34 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே தற்காலிக டிரைவரின் நண்பர் ஒருவர் அரசு பஸ்சை ஓட்டிச்சென்றதால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.

ஊட்டி,

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 7 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தற்காலிக ஊழியர்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முன்அனுபவம் இல்லாத தற்காலிக டிரைவர் ஓட்டிய அரசு பஸ் ஒன்று ஊட்டி அருகே தேனாடுகம்பை பகுதியில் வீட்டின் மீது மோதி நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது.

இந்த நிலையில் ‘வாட்ஸ் அப்‘பில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் ஊட்டியில் இருந்து கிளன்மார்கன் கிராமத்துக்கு அரசு பஸ்சை ஓட்டி சென்ற தற்காலிக டிரைவர் ஒருவர், தனது நண்பருக்கு பஸ்சை ஓட்டுவதற்காக கொடுத்து உள்ளார். இந்த வீடியோ ஊட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவில் டிரைவர் சீட்டில் தற்காலிக டிரைவரின் நண்பர் அமர்ந்து இருப்பதும், தற்காலிக டிரைவர் அருகில் நிற்பதும், பின் இருக்கைகளில் அவருடைய நண்பர்கள் அமர்ந்து அவரை உற்சாக படுத்துவதுமான காட்சிகள் இடம் பெற்று உள்ளன.

மேலும் அதில், பஸ் ஓட்டுபவர் மற்றும் அவருடைய நண்பர்கள் இடையே நடந்த உரையாடல் விவரம் வருமாறு:–

ஊட்டியில் இருந்து கிளன்மார்கன் கிராமத்துக்கு செல்லும் அந்த அரசு பஸ்சில் டிரைவர் இருக்கை அருகே தற்காலிக டிரைவர் நிற்க அவரது நண்பர் பஸ்சை ஓட்டுகிறார். பஸ்சை ஓட்டி செல்லும் நபர் தற்காலிக டிரைவரிடம் பஸ்சுக்கு பிரேக் பிடிக்க வில்லை என்கிறார். அதற்கு அவர் பஸ்சை கியரில் இயக்கி செல் என்று கூறுகிறார்.

அதைத்தொடர்ந்து அரசு பஸ்சுக்கு முன்னால் இருசக்கர வாகனம் வருவதால், ஜாக்கிரதையாக ஓட்டு. ஓட்டுனர் உரிமம் பெறும்போது, எட்டு போட்டியா?. காலை பிரேக்கில் வைத்து ஓட்டு என்று நண்பர்கள் கேலி கிண்டல் செய்கிறார்கள். மேலும், அரசு பஸ்சை இயக்க வேண்டும் என்ற உனது ஆசை நிறைவேறி விட்டதா? என்பதுடன் உரையாடல் நிறைவடைகிறது.

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக தனியார் மினி பஸ் மற்றும் வேன்களில் அதிக கட்டணம் வசூலிப்பதால், அதிக நேரம் காத்து இருந்தாலும் பயணிகள் அரசு பஸ்களில் பயணம் செய்கிறார்கள். இந்த நிலையில், தற்காலிக டிரைவர் அரசு பஸ்சை, தனது நண்பரிடம் ஓட்டக் கொடுத்துவிட்டு பயணிகள் குறித்து கவலையின்றி அருகில் நின்று வேடிக்கை பார்த்தது பயணிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தால் வட்டார போக்குவரத்து அதிகாரி, போக்குவரத்து கழக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, நேற்று முன்தினம் கிளன்மார்கனுக்கு அரசு பஸ்சை இயக்கி சென்ற தற்காலிக டிரைவர் இன்று (நேற்று) பணிக்கு வரவில்லை. அவரது ஓட்டுனர் உரிமம் அலுவலகத்தில் உள்ளது. அதை வாங்க அவர் வரும் போது நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும், என்றார்.


Next Story