கிரானைட் வழக்கில் வருவாய் ஆய்வாளர் சாட்சியம் அளித்தார் 27 வழக்குகள் தள்ளிவைப்பு
மேலூர் கோர்ட்டில் நடைபெற்று வரும் கிரானைட் வழக்கில் வருவாய் ஆய்வாளர் அரசுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தார்.
மேலூர்,
மேலூர் பகுதியில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் குறித்து தொடரப்பட்ட வழக்குகளின் மீதான விசாரணைகள் மேலூர் கோர்ட்டில் நடைபெற்று வருகின்றன. தனியார் இடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடமையாக்க அனுமதி கோரி அப்போதைய மதுரை கலெக்டர் சுப்பிரமணியன் தொடர்ந்த 20 வழக்குகளும், பல்வேறு கிரானைட் நிறுவனங்கள் மீது போலீசார் தொடர்ந்த 7 வழக்குகளும் நேற்று மேலூர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் பழனிவேல் முன்பு விசாரணைக்கு வந்தன.
அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ஷீலா ஆஜரானார். கிரானைட் நிறுவனங்களின் சார்பில் மனோகரன், அன்புச்செழியன், முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் ஆஜராகினர்.
வெள்ளலூர் கிராமத்தில் ஆனந்த் என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள கிரானைட் குவாரியில் இருந்து 46 கிரானைட் கற்களை அரசு கைப்பற்றியது. அப்போது சாட்சி கையொப்பம் இட்ட வருவாய்த் துறை ஆய்வாளர் தாமோதரன் அரசு தரப்பில் சாட்சியம் அளித்தார். அவரிடம் கிரானைட் நிறுவன வக்கீல்கள் பல்வேறு கேள்விகள் கேட்டனர்.
இதனை அடுத்து பல்வேறு கிரானைட் நிறுவனங்களின் மீது போலீசார் தொடர்ந்த 7 வழக்குகள் விசாரணைக்கு வந்தன. விசாரணைக்கு பின்னர் 27 வழக்குகளின் மீதான அடுத்த விசாரணைகளை மார்ச் மாதம் 21 மற்றும் 24–ந்தேதிகளுக்கு மாஜிஸ்திரேட் தள்ளிவைத்தார்.