சட்டத்துக்கு புறம்பாக மணல் எடுத்து செல்ல பயன்படுத்திய பாதை துண்டிப்பு


சட்டத்துக்கு புறம்பாக மணல் எடுத்து செல்ல பயன்படுத்திய பாதை துண்டிப்பு
x
தினத்தந்தி 11 Jan 2018 4:15 AM IST (Updated: 11 Jan 2018 4:36 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே சட்டத்துக்கு புறம்பாக மணல் எடுத்து செல்ல பயன்படுத்திய பாதை வனத்துறையினர் நடவடிக்கையின் பேரில் துண்டிக்கப்பட்டது.

கொள்ளிடம்,

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் மற்றும் வடரங்கம் ஆகிய இடங்களில் கொள்ளிடம் ஆற்றில் அரசுக்கு சொந்தமான மணல் குவாரிகள் இயங்கி வருகிறது. இங்கு இருந்து தினமும் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களுக்கு மணல் ஏற்றி செல்லப்படுகிறது. மேலும், சட்டத்திற்கு புறம்பாகவும், அதிகாரிகளின் உதவியுடனும் மணல் ஏற்றி சென்று விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மாதிரவேளூரில் உள்ள குவாரியில் இருந்து 2 கி.மீட்டர் தொலைவில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் புதிதாக பாதை அமைத்து கடந்த பல மாதங்களாக சட்டத்திற்கு புறம்பாக தினமும் 30-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் மணல் எடுத்து செல்லப்படுகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் பலமுறை எச்சரித்தனர். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் கேட்கவில்லை என்று தெரிகிறது.

பாதை துண்டிப்பு

இந்தநிலையில் நாகை மாவட்ட வன அலுவலர் ராகுல், சட்டத்திற்கு புறம்பாக மணல் எடுத்து செல்ல பயன்படுத்திய பாதையை துண்டிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் கொள்ளிடம் பகுதியை சேர்ந்த வனக்காப்பாளர் ஆசைத்தம்பி, வன பாதுகாவலர்கள் பன்னீர், தமிழரசன் மற்றும் ஊழியர்கள் பொக்லின் எந்திரத்தின் உதவியுடன் மணல் எடுத்து செல்ல பயன்படுத்திய புதிய பாதையின் குறுக்கே வாகனங்கள் கொள்ளிடம் ஆற்றுக்கு செல்லாத வகையில் 10 அடி ஆழத்திற்கு 15 அடி அகலத்திற்கு பள்ளம் தோண்டினர். இதனால் புதிய பாதை வழியாக சட்டத்திற்கு புறம்பாக மணல் எடுத்து செல்வது நிறுத்தப்பட்டது. 

Next Story