நெல்–கரும்புக்கு விலை நிர்ணயம் செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கடலூர் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்,
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கடலூர் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார். நிர்வாகி கலியமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மாதவன், தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்கள்.
நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரமும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும், உற்பத்தி செலவுடன் கூடுதலாக 50 சதவீதம் விலை தீர்மானிக்க வேண்டும் என்ற விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், கெடிலம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், ஈ.ஐ.டி. கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் தென்னரசு, தலைவர் மணி, கடலூர் ஒன்றிய பொருளாளர் கடவுள், நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், திருமலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.