கண்களில் கருப்பு துணி கட்டியபடி கடலூர் தொழிலாளர் அலுவலகத்தை போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை


கண்களில் கருப்பு துணி கட்டியபடி கடலூர் தொழிலாளர் அலுவலகத்தை போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 11 Jan 2018 4:50 AM IST (Updated: 11 Jan 2018 4:50 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4–ந் தேதி மாநிலம் முழுவதும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர்,

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4–ந் தேதி மாநிலம் முழுவதும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 7–வது நாளாக போராட்டம் நீடித்தது.

இதனால் பஸ்போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் சிரமத்தை தவிர்ப்பதற்காக தற்காலிக டிரைவர்கள் மூலம் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களும் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். நேற்று முன்தினம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அடுத்த கட்டமாக தொழிலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்யப்போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று மாலையில் தொ.மு.ச. தலைவர் பழனிவேல் தலைமையில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தொழிலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் புதிதாக போடப்பட்ட ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story