பழவேற்காடு கடற்கரையில் நாய்கள் கடித்து குதறியதால் 10 ஆமைகள் இறந்தன


பழவேற்காடு கடற்கரையில் நாய்கள் கடித்து குதறியதால் 10 ஆமைகள் இறந்தன
x
தினத்தந்தி 11 Jan 2018 4:55 AM IST (Updated: 11 Jan 2018 4:55 AM IST)
t-max-icont-min-icon

பழவேற்காடு கடற்கரையில் நாய்கள் கடித்து குதறியதால் இனப்பெருக்கத்திற்காக வந்த 10 ஆமைகள் இறந்தன.

பொன்னேரி,

தமிழகம் 1,076 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீண்ட கடற்கரையை கொண்டுள்ளது. கடற்கரை பகுதியில் 591 மீனவ கிராமங்கள் உள்ளன. ஆண்டுக்கு 6 ஆயிரம் டன் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

மீன் வளத்தை அழிக்கும் சக்தியாக ஜெல்லி மீன்கள் விளங்குகின்றன. ஜெல்லி மீன்களின் இயற்கையான எதிரியாக கடல் ஆமைகள் உள்ளன. கடல் ஆமைகள் ஜெல்லி மீன்களை தின்று மீன் இனத்தை காத்து வருகின்றன. மீன் வளத்தை பெருக்குவதுடன் மீனவர்களின் நண்பனாகவும் திகழ்ந்து வருகின்றன. மேலும் மீன்களுக்கு உணவாகும் பவளப்பாறைகளில் வளரும் பாசிகள் இனப்பெருக்கத்துக்கும் உதவி செய்து வருகின்றன.

இவ்வாறு கடல் வளம் காக்க உதவும் ஆமைகளுக்கு, ஆண்டுதோறும் டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை இனப்பெருக்க காலமாகும். இந்த காலகட்டத்தில் கடற்கரைக்கு வந்து ஆமைகள் முட்டையிடுவது வழக்கம்.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடற்கரை பகுதிக்கு ஏராளமான ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக தற்போது வருகின்றன. இவ்வாறு வரும் ஆமைகள் கடற்கரை மணலில் முட்டையிட்டு செல்கின்றன. ஒரு ஆமை 50 முதல் 300 வரை முட்டைகள் இடும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே பழவேற்காடு சாத்தாங்குப்பம், கோரைக்குப்பம், வைரவங்குப்பம் ஆகிய கடற்கரை பகுதிகளில் ஆமைகள் இறந்து கிடக்கின்றன. இனப்பெருக்கத்திற்காக அதிகாலையில் கடற்கரையில் முட்டையிட வரும் ஆமைகளை நாய்கள் கடித்து குதறி விடுகின்றன. இதனால் 10 ஆமைகள் இறந்து விட்டன.

இறந்த ஆமைகள் 3 அடி நீளமும், 60 கிலோ எடையும் கொண்டவை ஆகும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கடல் ஆமைகள் இறப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூகஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story