வண்டலூர் பூங்காவில் ஆன்–லைன் மூலம் நுழைவு சீட்டு வழங்கும் முறை அறிமுகம்


வண்டலூர் பூங்காவில் ஆன்–லைன் மூலம் நுழைவு சீட்டு வழங்கும் முறை அறிமுகம்
x
தினத்தந்தி 11 Jan 2018 5:04 AM IST (Updated: 11 Jan 2018 5:04 AM IST)
t-max-icont-min-icon

வண்டலூர் பூங்காவில் ஆன்–லைன் மூலம் நுழைவு சீட்டு வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வண்டலூர்,

சென்னையை அடுத்த வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்களின் வசதிக்காக ஆன்–லைன் மூலமாக நுழைவு சீட்டுகள் வழங்கும் முறை மற்றும் பூங்காவின் இதர வசதிகளான மின்கல ஊர்தி, சிங்க மான் உலாவிட ஊர்தி போன்ற வசதிகளையும் பெறும் முறை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

ஆன்–லைன் மூலமாக நுழைவு சீட்டுகள் மற்றும் இதர வசதிகள் முன் பதிவு செய்ய விரும்புவோர் www.aazap.in அல்லது www.vandalurzoo.com ஆகிய இணையதளங்கள் மூலமாக பதிவு செய்யலாம்.

பார்வையாளர்கள் தங்களது பெயர், பூங்காவிற்கு வருகை தரும் நாள் மற்றும் நபர்களின் எண்ணிக்கை போன்ற தகவல்களை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும். இந்த வசதி ஆக்ஸிஸ் வங்கி மூலமாக செய்யப்பட்டுள்ளது.

வெற்றிகரமாக பதிவு செய்த பார்வையாளர்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக பதிவு குறித்த விவரம் அறியப்படுவார்கள். பார்வையாளர்கள் நுழைவுசீட்டு பதிவு செய்த விவர ரசீது மற்றும் ஆளறி சான்று ஆகியவற்றை தங்கள் வருகையின்போது சமர்ப்பிக்க வேண்டும்.

இணைய வழி மூலமாக முன் பதிவு செய்த பார்வையாளர்கள் தனி வழி மூலமாக அனுமதிக்கப்படுவார்கள். இந்த வசதியால் பார்வையாளர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்படும்.

வங்கி கடன் அட்டை (கிரெடிட் கார்டு) மற்றும் பற்று அட்டை (டெபிட் கார்டு) மூலமாகவும் நுழைவுசீட்டு பெறும் வசதி கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

பொங்கல் விடுமுறை காலத்தில் பார்வையாளர்கள் அதிக அளவில் பூங்காவிற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதால் ஆன்–லைன் மூலமாக நுழைவுசீட்டுகள் வழங்கும் வசதி முன்கூட்டியே பார்வையாளர்கள் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வருகிற 16–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காணும் பொங்கலை முன்னிட்டு பூங்கா திறந்திருக்கும் இவ்வாறு பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story