5 ஆண்டுகளாக பூட்டப்பட்டு கிடக்கும் அரசு கட்டிடம் சமுதாய நலக்கூடம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ஆலந்தூரில் 5 ஆண்டுகளாக பூட்டப்பட்டு கிடக்கும் அரசு கட்டிடத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த ஆலந்தூர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. முன்னதாக, நகராட்சியாக இருந்தபோது நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அரசு கட்டிடத்தில் நகராட்சி பள்ளி செயல்பட்டு வந்தது.
பள்ளி விடுமுறை நாட்களில் இந்த கட்டிடம் ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் திருமண நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டது.
பின்னர் இந்த பள்ளிக்கூடம் ஆலந்தூர் ஜால் தெருவில் உள்ள பள்ளியுடன் இணைக்கப்பட்டது. எனவே இந்த கட்டிடம் நகராட்சி சார்பில் சமுதாய நலக்கூடமாக மாற்றப்பட்டு ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விடப்பட்டது.
இதற்கிடையே இந்த கட்டிடத்தில் கோர்ட்டு தொடங்கப்பட்டு, பின்னர் சொந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு விட்டது. இதனால் காலியாக இருந்த இந்த கட்டிடம் வணிக நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டது. நாளடைவில் வணிக நிறுவனங்களும் காலி செய்யப்பட்டு விட்டன. தற்போது இந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.
இருப்பினும் இந்த கட்டிடத்தின் பிற பகுதிகள் பயன்பாடு இன்றி கடந்த 5 ஆண்டுகளாக பூட்டப்பட்டு உள்ளது. இதனை பயன்படுத்தி இரவு நேரங்களில் சிலர் இந்த கட்டிடத்துக்குள் புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
ஆலந்தூரில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் வகையில் சமுதாய நலக்கூடம் எதுவுமில்லை. பரங்கிமலை கண்டோண்மெண்ட் போர்டு பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்திற்கு தான் செல்லவேண்டி இருக்கிறது. எனவே பாழடைந்து வரும் இந்த கட்டிடத்தை சீரமைத்து மீண்டும் புதுபொலிவுடன் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் இந்த கட்டிடம் அமைந்திருக்கும் இடம் தங்களுக்கு வேண்டும் என்று சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் கோரியிருப்பதாகவும், அதனால் அங்கு எதுவும் செய்யமுடியாது என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும் இந்த கட்டிடத்தை மறுசீரமைப்பு செய்து சமுதாய நலக்கூடமாக மாற்றினால் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது நல சங்கத்தினரும் வலியுறுத்தி வருகின்றனர்.