மோட்டார் சைக்கிள்கள் மோதல்: மருந்து கம்பெனி ஊழியர் பலி
வில்லியனூரியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வில்லியனூர்,
நாகை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்தவர் ரங்கராஜ். இவருடைய மகன் பிரசாந்த் (வயது 27). பட்டதாரி. இவரும், சீர்காழியை சேர்ந்த கண்ணனும் (25) புதுவை மாநிலம் மங்கலத்தில் உள்ள மருந்து கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். இதையொட்டி வில்லியனூர் வசந்தம் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்.
நேற்று காலை வழக்கம்போல் பிரசாந்த், கண்ணன் ஆகிய இருவரும் வேலைக்கு செல்வதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். வில்லியனூர் இந்தியன் வங்கி அருகில் சென்றபோது எதிரே வந்த உத்திரவாகினிபேட்டை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரின் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் பலமாக மோதியது.
இதில் பிரசாந்த், கண்ணன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயமடைந்த பிரசாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கண்ணன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். சண்முகம் சுந்தரம் லேசான காயத்துடன் தப்பினார்.
விபத்து பற்றி வில்லியனூர் போக்குவரத்து போலீசாருக்கு அங்கிருந்தவர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கலியபெருமாள், உதவி சப்–இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பலியான பிரசாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த கண்ணன் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.