மாணவ-மாணவிகளை மனஉளைச்சலில் இருந்து மீட்க நடவடிக்கை விழிப்புணர்வு முகாமில் கலெக்டர் பேச்சு


மாணவ-மாணவிகளை மனஉளைச்சலில் இருந்து மீட்க நடவடிக்கை விழிப்புணர்வு முகாமில் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 12 Jan 2018 4:15 AM IST (Updated: 12 Jan 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

மனஉளைச்சலில் இருந்து மாணவ-மாணவிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் ராமன் தெரிவித்தார்.

வேலூர்,

வேலூர் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை மற்றும் அனைத்து வங்கிகள் சார்பில் உயர்கல்வி கடன் குறித்த விழிப்புணர்வு முகாம் வேலூர் முஸ்லிம் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் வரவேற்று பேசினார்.

கலெக்டர் ராமன் தலைமை தாங்கி ஏற்கனவே உயர்கல்வி கடனுக்கு விண்ணப்பித்திருந்த மாணவ- மாணவிகளுக்கு காசோலைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தீர்வு கிடைப்பதில்லை

பிளஸ்-2 முடிக்கும் மாணவ- மாணவிகள் பொருளாதார ரீதியாக உயர்கல்விக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வரும் பெரும்பாலான மனுக்கள் கல்விக்கடன் கேட்டுதான் கொடுக்கிறார்கள். அந்த மனுக்களை வங்கி அதிகாரிகளிடத்தில் கொடுத்து கடன்கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

சில பெற்றோர்களுக்கு வங்கிகளில் எப்படி கடன் பெறுவது என்று தெரிவதில்லை. பலர் வங்கிக்கு சென்றாலும் அவர்களுக்கு உரிய தீர்வு கிடைப்பதில்லை என்று புகார்கள் வருகிறது. அதனால்தான் இதுபோன்ற முகாம்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீட்க நடவடிக்கை

பொருளாதார ரீதியாக உயர்கல்வி படிக்க முடியவில்லை என்ற ஏக்கம் பலருக்கு இருக்கும். படிப்பதற்கு ஏற்ற கல்லூரி கிடைத்தால் அந்த கல்லூரியில் படிப்பதற்கான சான்று மற்றும் கல்வி கட்டணத்திற்கான சான்றை இணைத்து வங்கிகளில் விண்ணப்பிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக வங்கிகள் மூலம் இந்த சேவை செய்யப்பட்டு வருகிறது.

படித்தால் மட்டும் போதாது. தற்போது மாணவ- மாணவிகள் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள், பல காரணிகள் அவர்களின் மனதை திசை திருப்புகின்றன. இதில் இருந்து அவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னோடி வங்கி மேலாளர் தாமோதரன் மற்றும் வங்கி அதிகாரிகள், மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். 

Next Story