பொங்கல் பண்டிகை விடுமுறை எதிரொலி பஸ் நிலையங்களில் நிரம்பி வழிந்த கூட்டம்


பொங்கல் பண்டிகை விடுமுறை எதிரொலி பஸ் நிலையங்களில் நிரம்பி வழிந்த கூட்டம்
x
தினத்தந்தி 12 Jan 2018 4:00 AM IST (Updated: 12 Jan 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகை விடுமுறை எதிரொலியாக திருச்சி பஸ்நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. போக்குவரத்து தொழிலாளர்களின் 8-வது நாள் போராட்டத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

திருச்சி,

ஊதிய உயர்வு, பிடித்தம் செய்த பணத்தை அவரவர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். திருச்சி மாவட்டத்தில் நேற்று 8-வது நாளாக அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தது.

இந்த நிலையில் நேற்று காலை திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து அதிக அளவில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட கண்டக்டர், டிரைவர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டன. அரசு டவுன் பஸ்கள் குறைவாகவே இயக்கப்பட்டன. தனியார் டவுன் பஸ்கள் அதிகம் இயக்கப்பட்டன.

பயணிகள் கூட்டம் அலைமோதியது

இதற்கிடையில் பொங்கல் பண்டிகைக்கு பள்ளி, கல்லூரி களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 5 நாட்கள் விடுமுறையை தமிழக அரசு அறிவித்தது. தொடர் விடுமுறை வருவதால் பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட ஏதுவாக வெளியூர்களில் தங்கி படித்து வரும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும், நேற்று இரவே ஊருக்கு புறப்பட்டனர். இதன் காரணமாக திருச்சி மத்திய பஸ் நிலையம் மற்றும் சத்திரம் பஸ் நிலையங்களில் நேற்று இரவு பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

தனியார் பஸ்களில் வழக்கத்தைவிட பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒருவருக்கொருவர் முண்டியடித்து கொண்டு பஸ்களில் ஏறினர். இதேபோல் ரெயில் நிலையத்திலும் அதிக அளவில் பயணிகளை காண முடிந்தது. பயணிகள் கூட்டம் அலைமோதியதால் திருச்சி ஜங்ஷன் ரவுண்டானாவில் இருந்து மத்திய பஸ் நிலையம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே அங்கு வந்த போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.

அதிக கட்டணம்

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடர்வதால் சொந்த ஊர்களுக்கு செல்வது எப்படி என்று தெரியாமல் திருச்சியில் வசிக்கும் வெளியூர் மக்கள் புலம்பி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் மற்றும் ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இருப்பினும் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல வேண்டுமே என்ற காரணத்தால் அதிக கட்டணம் கொடுத்து செல்கிறோம் என்று பயணிகள் கூறினர்.

8-வது நாள் நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டம் குறித்து தொழிற்சங்க நிர்வாகிகளிடம் கேட்ட போது கூறியதாவது:-

திருச்சி மண்டலத்தில் 16 பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்கள் மூலம் ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் வசூலாகும். வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், தற்காலிக பணியாளர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. இதனால் ஒரு நாளைக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை தான் வசூல் ஆவதாக கூறுகின்றனர். தற்காலிக கண்டக்டர்கள் பலர் முறைகேடு செய்கின்றனர். மேலும் முறைப்படி அறிவிப்பு கொடுத்து தான் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்படுகிறது.

10 சதவீத பஸ்கள்தான்...

இது போன்ற நோட்டீசுகளை பார்த்து இதுவரை 5 தொழிலாளர்கள் அதிர்ச்சியில் இறந்து உள்ளனர். எனவே இனிமேல் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மரணம் ஏற்படக்கூடாது. இவர்கள் சாவுக்கு துறை அதிகாரிகள் தான் பொறுப்பு. துறை அதிகாரிகள் ஒரு நாளைக்கு 50, 60 சதவீதம் அரசு பஸ்கள் இயக்கப்படுவதாக கூறுகின்றனர். ஆனால் உண்மையில் 10 சதவீதம் அரசு பஸ்கள் தான் இயக்கப்படுகிறது.

இவ்வாறுஅவர்கள் கூறினர். 

Next Story