முதல்-மந்திரி பட்னாவிஸ் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பியது
முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பயணித்த ஹெலிகாப்டர் பள்ளிக்கூட மைதானத்தில் தரையிறங்கிய போது, கேபிள் வயர் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை,
முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஹெலிகாப்டர் பயணத்தை தொடங்கும் போதெல்லாம் துரதிருஷ்ட சம்பவங்களும் அவரை பின்தொடர்கின்றன. கடந்த ஆண்டு மே மாதம் 10–ந் தேதி அவர் நாக்பூரில் இருந்து கட்சிரோலிக்கு வான்வழியாக, அதாவது ஹெலிகாப்டர் மூலமாக பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
ஹெலிகாப்டரின் வருகையை எதிர்பார்த்து அவர் காத்திருந்த இடத்தை அடைவதற்குள், ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டு பறக்க இயலாத நிலையை எட்டியது. முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சாலை மார்க்கமாக கட்சிரோலி சென்றார்.
அதே மாதம் 25–ந் தேதி ஏற்பட்ட விபத்தை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. லாத்தூர் மாவட்டம் நிலங்கா கிராமத்தில் தற்காலிக ஹெலிபேடில் இருந்து அவர் ஹெலிகாப்டர் மூலமாக பயணத்தை தொடங்கவும், மேலே சென்ற மின்சார வயரில் ஹெலிகாப்டரின் இறக்கை பகுதி சிக்கி, தீப்பொறி ஏற்பட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.
இதில், லேசான காயங்களுடன் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட அதில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஹெலிகாப்டர் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதால், சில கட்டிடங்கள் சேதம் அடைந்தன.
அதன்பின்னர், ஜூலை 7–ந் தேதி மும்பையை அடுத்த அலிபாக்கில் ஹெலிகாப்டரில் ஏறுவதற்காக அவர் வந்தார். அவர் ஹெலிகாப்டரில் ஏறுவதற்கு முன்பு விமானி, ஹெலிகாப்டரை இயக்கியதால், அதன் வால் பகுதியில் உள்ள ரோடார் எனப்படும் சுழலி வேகமாக சுழன்றது. சுதாரித்து கொண்ட பாதுகாவல் அதிகாரிகள், முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசை பத்திரமாக மீட்டு, ஆபத்தில் இருந்து அவரை விலக்கினர்.
கடந்த டிசம்பரில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அதிகாரிகளுடன் நாசிக்கில் இருந்து அவுரங்காபாத் நோக்கி சென்ற ஹெலிகாப்டர், அதிக பாரம் காரணமாக மீண்டும் நாசிக் திரும்பி தரையிறங்கியது. அதில் இருந்த ஒருவர் கீழே இறக்கிவிடப்பட்டார். இதைத்தொடர்ந்து, ஹெலிகாப்டர் பறந்துசென்றது. சரியான நேரத்தில் பாரம் குறைக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பரபரப்பான இந்த சூழலில், நேற்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் வந்த ஹெலிகாப்டர், மும்பையை அடுத்த பயந்தரில் உள்ள பள்ளிக்கூட மைதானத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஹெலிபேடில் தரையிறங்க வந்தது.
அப்போது, ஹெலிபேடின் நடுவே கேபிள் வயர் ஒன்று கிடந்ததை கவனித்த விமானி, அதனை தரையிறக்காமல் மேல் நோக்கி நகர்த்தினார். இதனால், திடீர் பரபரப்பு உண்டானது. பின்னர், விமானியின் அறிவுறுத்தலுக்கு இணங்க கேபிள் வயர் அகற்றப்பட்டது. ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறங்கியது.
இதனால், மீண்டும் ஒரு விபத்தில் இருந்து முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தப்பினார். ஹெலிகாப்டர் தரையிறங்கியதில் சிக்கல் ஏற்பட்டதே அன்றி, விபத்து நேரிடவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றி முதல்–மந்திரியிடம் கேட்டபோது, வீண்பேச்சுகளுக்கு பதில் அளிப்பதை தான் நிறுத்திவிட்டதாக கூறினார்.