கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்தபோது பரிதாபம் ரெயிலில் இருந்து விழுந்த என்ஜினீயரிங் மாணவர் பலி
கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்தபோது ரெயிலில் இருந்து கீழே விழுந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
நெல்லை,
கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்தபோது ரெயிலில் இருந்து கீழே விழுந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
கல்லூரி மாணவர்தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோட்டை சேர்ந்தவர் ராஜா உசேன். ஓட்டல் தொழிலாளி. இவருடைய மகன் ராசித் முத்தலிபா (வயது 20). கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார். பொங்கல் திருநாளையொட்டி விடுமுறை விடப்பட்டுள்ளதால், ராசித் முத்தலிபா நேற்று முன்தினம் இரவு சொந்த ஊருக்கு புறப்பட்டார். இதற்காக அவர், கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினார். இந்த ரெயிலில் தூத்துக்குடிக்கு இணைப்பு ரெயில் இணைக்கப்பட்டு இருந்தது. அந்த பெட்டியில் ராசித் முத்தலிபா பயணம் செய்தார்.
நேற்று அதிகாலை இந்த ரெயில் சாத்தூர் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது படிக்கட்டு பகுதியில் இருந்து ராசித் முத்தலிபா கீழே விழுந்தார். இதில் அவர் ரெயில் படிக்கட்டுக்கும், பிளாட்பார சுவருக்கும் இடையே விழுந்து சிக்கி உடல் நசுங்கினார்.
பரிதாப சாவுஇதைக்கண்ட ரெயில்வே போலீசார், உடனடியாக அவரை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் ராசித் முத்தலிபா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தூத்துக்குடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.