ரெயிலில் அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


ரெயிலில் அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
x
தினத்தந்தி 13 Jan 2018 4:00 AM IST (Updated: 13 Jan 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

சென்னை புறநகர் பகுதிகளில் ரெயிலில் அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு பொதுமக்களின் கவனக்குறைவே காரணம் என ரெயில்வே போலீசார் குற்றம் சாட்டுகின்றனர்.

தாம்பரம்,

சென்னை புறநகர் பகுதியான மீனம்பாக்கத்தில் இருந்து மறைமலைநகர் வரையிலான 31 கிலோ மீட்டர் தூரம் உள்ள ரெயில் பாதையில் மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம், குரோம்பேட்டை, சானடோரியம், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்கொளத்தூர், மறைமலைநகர் என 13 ரெயில் நிலையங்கள் உள்ளன.

இந்த ரெயில் பாதையில் செல்லக்கூடிய மின்சார ரெயில்களில் தினமும் சுமார் 4 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். மேலும் இந்த பாதை வழியாக தென் மாவட்டங்களில் இருந்து வந்து, செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் ஆயிரகணக்கானோர் பயணம் செய்கின்றனர்.

அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கும் மின்சார ரெயில் சேவை நள்ளிரவு 12.30 மணி வரை தொடர்கிறது. அதே போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அதிகாலை முதல் நள்ளிரவு வரை இந்த ரெயில் பாதையில் பயணிக்கின்றன.

ரெயில்கள் அதிகம் செல்லும் இந்த ரெயில் பாதையில், ரெயிலில் அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது.

மீனம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து மறைமலைநகர் வரை உள்ள 13 ரெயில் நிலையங்களிடேயே ரெயிலில் அடிபட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

குறிப்பாக பொத்தேரி, ஊரப்பாக்கம், பெருங்களத்தூர், சானடோரியம், திரிசூலம், மீனம்பாக்கம் பகுதிகளில் அதிக பேர் ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளனர்.

கடந்த 2015–ம் ஆண்டு ரெயிலில் அடிபட்டு 214 பேர் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2016–ம் ஆண்டில் 183 ஆகவும், 2017–ம் ஆண்டில் 187 ஆகவும் உயர்ந்திருக்கிறது.

உயிர் இழந்தவர்களில் ஏராளமானவர்கள் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் என்பதே வேதனைக்குரிய ஒன்றாகும்.

ரெயில் மோதி ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்க ரெயில்வே போலீசார் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதே சமயம் உயிர் இழப்புகளுக்கு பொதுமக்களின் கவனக்குறைவே காரணம் என ரெயில்வே போலீசார் குற்றம் சாட்டுகின்றனர்.

ரெயிலில் பயணம் செய்யும்போது சாகசம் செய்வதாக நினைத்து படிக்கட்டில் தொங்கிய படி செல்வது, ஓடும் ரெயிலில் ஏறுவது, செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடப்பது, கவனக்குறைவுடன் தண்டவாளத்தில் நடப்பது போன்றவையே விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

தண்டவாளத்தை கடந்து செல்லக்கூடாது, தண்டவாளத்தில் நடக்கக்கூடாது என பலமுறை எச்சரித்தாலும் விரைவாக செல்லவேண்டும் என்பதற்காக, இருக்கும் பாதைகளை விட்டுவிட்டு குறுக்கு பாதையில் சென்று ரெயிலில் அடிபட்டு உயிரை விடுவதாக ரெயில்வே போலீசார் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக தாம்பரம் ரெயில்வே போலீசார் கூறியதாவது:– மீனம்பாக்கம் முதல் மறைமலைநகர் வரை உள்ள ரெயில் பாதையில் ரெயிலில் அடிபட்டு இறந்தால் அவற்றை உடனடியாக சென்று விசாரிக்கக்கூட போதுமான போலீசார் இங்கு இல்லை.

இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 27 போலீசார் இருக்க வேண்டும். ஆனால் இங்கு பணியில் 10 போலீசார் மட்டுமே இருக்கின்றனர். மற்றவர்களை உயர் அதிகாரிகள் வெளி பணிக்கு அனுப்பி விடுகின்றனர். மிகுந்த மன உளைச்சலில் வேலை செய்கின்ற நிலைமை உள்ளது.

ரெயிலில் அடிபட்டு இறந்து கிடக்கும் உடல்களை ஆள் வைத்து அப்புறப்படுத்துவது, ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனையின் சவ கிடங்கிற்கு கொண்டு செல்வது, அடையாளம் தெரியாத பிணங்களை மருத்துவமனையில் இருந்து கொண்டு சென்று புதைப்பது போன்ற அனைத்து பணிகளையும் நாங்களே தான் செய்ய வேண்டி உள்ளது.

தேவைக்கேற்ப போலீசாரை பணி அமர்த்தினால் மட்டுமே, தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் ரெயில் நிலையங்களில் போதிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.


Next Story