குன்னத்தூரில் சூதாட்டத்தில் தகராறு: கிணற்றில் தவறி விழுந்து லாரி உரிமையாளர் பலி
குன்னத்தூரில் சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக உயிருக்கு பயந்து ஓடிய லாரி உரிமையாளர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக பலியானார்.
குன்னத்தூர்,
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே கருணம்பதியில் ஹரி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, காங்கேயம், அவினாசி மற்றும் குன்னத்தூரை சுற்றி உள்ள பகுதியில் இருந்து ஏராளமானோர் வந்து சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்தநிலையில், திருப்பூர் அருகே உள்ள போயம்பாளையத்தை சேர்ந்த குமார்(வயது 38) என்பவர் தனது நண்பர்கள் ராஜ், சாமி ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு அங்கு பணம் வைத்து சூதாடினார்கள். அப்போது அங்கு சீட்டு விளையாடிக்கொண்டிருந்த மற்றொரு கும்பலை சேர்ந்த சிலர் தகராறில் ஈடுபட்டனர். மேலும் ஆயுதங்களை காட்டி மிரட்டி அங்கிருந்தவர்களிடம் பணத்தை பறித்துக்கொண்டு விரட்டியுள்ளனர்.
இதனால், சூதாட்டத்துக்கு வந்த குமார், ராஜ், சாமி உள்பட ஏராளமானோர் உயிருக்கு பயந்து ஓடியுள்ளனர். இரவு நேரம் என்பதாலும் தோட்டத்தில் வெளிச்சம் இல்லாததாலும் எங்கு செல்கிறோம் என்று வழி தெரியாமல் அவர்கள் ஓடினர். அப்போது, தோட்டத்தில் உள்ள தண்ணீரில்லாத கிணற்றில் குமார் தவறி விழுந்துள்ளார். இதுதெரியாமல், குமாரை காணவில்லை என்று, அவருடைய நண்பர்கள் அவரை பல்வேறு இடங்களில் விடிய, விடிய தேடியுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று காலை தோட்டத்து கிணற்றில் அவருடைய நண்பர்கள் தேடிய போது, குமார் கிணற்றில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுபற்றி குன்னத்தூர் போலீசாருக்கும் அவினாசி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களும், போலீசாரும், கிணற்றில் கிடந்த குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் போலீசார் விசாரணை நடத்திய போது, போயம்பாளையத்தை சேர்ந்த குமார் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்ததும், புதிய லாரி வாங்க முன்பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி, தனது மனைவியிடம் இருந்து 5 பவுன் நகை மற்றும் பணத்தை வாங்கிக்கொண்டு, குன்னத்தூருக்கு நண்பர்களுடன் வந்து சூதாட்டத்தில் ஈடுபட்டதும், அப்போது அங்கு சூதாடிக்கொண்டிருந்த கும்பல் அவரிடம் இருந்து பணத்தையும், நகையையும் பறித்துக்கொண்டு விரட்டிய போது, குமார் கிணற்றில் விழுந்து இறந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப்பதிவு செய்து சூதாட்டத்தில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது? சூதாட வந்தவர்களிடம் பணம் பறித்து சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கிணற்றில் விழுந்து பலியான குமாருக்கு சித்ரா(35) என்ற மனைவியும், நந்தினி(13) என்ற மகளும், லோகேஷ்(11) என்ற மகனும் உள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.