கோவை மாவட்டத்தில் விண்ணப்ப மூப்பு அடிப்படையில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்


கோவை மாவட்டத்தில் விண்ணப்ப மூப்பு அடிப்படையில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
x
தினத்தந்தி 13 Jan 2018 4:45 AM IST (Updated: 13 Jan 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் மூப்பு அடிப்படையில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை,

கோவை மாவட்டத்தில், மத்திய மாநில அரசுகள் மூலம் வழங்கப்படும் கடனுதவி, மாவட்ட நிர்வாகம், மற்றும் கோவை மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர் ஹரிகரன், மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன், எம்.ஏல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி மாவட்டத்தில் செய்யப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:–

மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருகிறார். தமிழக மக்களுக்கு பல்வேறு முன்னோடி திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதுடன், அதிக அளவில் கடனுதவிகளை வழங்கி தொழில் முனைவோர்கள், படித்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை ஊக்கப்படுத்தி வருகிறது.

சிறு வியாபரிகள் முதல் சிறு, குறு தொழில் துவங்குவோர் பயனடையும் கடன் திட்டம், மகளிர் முன்னேற்றத்துக்கான தனிநபர் கடன் திட்டம், மானியம் வழங்கும் கடன் திட்டம், மானியம் இல்லாத கடன் திட்டம், பிணையமில்லா கடன் திட்டம், குறுகிய கால மற்றும் நீண்டகால கடன் திட்டம், தாட்கோ கடன் திட்டம், மாவட்ட தொழில் மையம் வழங்கும் கடன் திட்டம், மாவட்ட முன்னோடி வங்கி மூலம் வழங்கப்படும் கடன் திட்டம் என பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே படித்த இளைஞர்கள் சுயதொழில் செய்ய இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் வீட்டு குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் விண்ணப்ப மூப்பு அடிப்படையில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். குறிப்பாக வீட்டின் குடிநீர் இணைப்பு பெறும்போது சாலைகளில் தோண்டாமல், கீழ்ப்புறம் துளையிட்டு இயந்திரம் மூலம் குடிநீர் இணைப்பு அமைக்க வேண்டும். விதிகளை மீறி குடிநீர் இணைப்பு அமைக்கும் பிளம்பர்களின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும்.

கோவை மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்ந்து சிறப்பாக நடந்து வருகிறது. கிராமப்புற பகுதிகளில் அனைத்து சாலைகளும் சிறந்த முறையில் அமைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story