பட்டாசு தொழிலை பாதுகாக்க சட்டதிருத்தம் கொண்டு வரப்படும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
‘சிவகாசி பட்டாசு தொழிலை பாதுகாக்க சட்டதிருத்தம் கொண்டு வரப்படும்’ என்று கோவையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கோவை,
தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை 6.30 மணியளவில் விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
சிவகாசி பட்டாசு தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு வருகிற 22–ந் தேதி வர உள்ளது. அதற்காக மூத்த வக்கீல்களை வைத்து வாதாடி தமிழக அரசு பாதுகாப்பை ஏற்படுத்தும். மேலும் அதில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தினகரன் பற்றிய கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், ‘நல்ல நாளில் அதை ஏன் நினைக்க வேண்டும். நல்லதை நினைப்போமே’ என்றார்.
அப்போது விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களை மேள தாளம் முழங்க கோவை விமான நிலைய அதிகாரிகள் அங்கு நடந்த பொங்கல் விழாவுக்கு அழைத்து வந்தனர். அங்கு குத்துவிளக்கேற்றி பொங்கல் விழாவை முதல்–அமைச்சர் தொடங்கி வைத்தார். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த உறியடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு விமான நிலைய அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அதைத்தொடர்ந்து அங்கிருந்த உறியடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கட்டி தொடங்கவிடப்பட்டிருந்த பானையை உடைத்தார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அதன்பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் சேலம் புறப்பட்டு சென்றார்.