இடும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்


இடும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்
x
தினத்தந்தி 13 Jan 2018 4:25 AM IST (Updated: 13 Jan 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டம் இடும்பூரை சேர்ந்தவர் கணேசன்.

நச்சனூர்,

கரூர் மாவட்டம் இடும்பூரை சேர்ந்தவர் கணேசன் (வயது55). விவசாயி. மாற்றுத்திறனாளியான இவர் 2¼ ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவர் விவசாய கடன் பெறுவதற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இடுப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் இவருக்கு பின்னர் விண்ணப்பித்தவர்களுக்கு கடன் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் கணேசன் மற்றும் 5 விவசாயிகள் நேற்று மாலை 6 மணி அளவில் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு வந்தனர். இது பற்றி அவர்கள் கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன், செயலாளர் அம்பிகா ஆகியோரிடம் கேட்டுள்ளனர். அதற்கு கூட்டுறவு சங்க அதிகாரிகள், உங்களது விண்ணப்பம் மேல்அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். அதற்கு விவசாயிகள், எங்களுக்கு பிறகு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது என்று கூறி கூட்டுறவு கடன் சங்கத்தை பூட்டவிடாமல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து சங்க செயலாளர் அம்பிகா குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

 அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முற்றுகையில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார், இன்று (சனிக்கிழமை) போலீஸ்நிலையத்துக்கு வாருங்கள் அதிகாரிகளை அழைத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றனர். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story