மராட்டியத்தில் ‘சாதி மோதலுக்கு பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தான் காரணம்’


மராட்டியத்தில் ‘சாதி மோதலுக்கு பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தான் காரணம்’
x
தினத்தந்தி 13 Jan 2018 4:27 AM IST (Updated: 13 Jan 2018 4:27 AM IST)
t-max-icont-min-icon

‘‘மராட்டியத்தில் சாதி மோதலுக்கு பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தான் காரணம்’’ என்று டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

மும்பை,

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் தாயார் ஜிஜாபாயின் பிறந்தநாளையொட்டி, அவர் பிறந்த இடமான புல்தானா மாவட்டம் சிந்த்கேட் ராஜாவில் உள்ள நினைவிடத்தில் டெல்லி முதல்–மந்திரி மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:–

ஒட்டுமொத்த உள்ளார்ந்த சமூகத்தை அடைய வேண்டும் என்ற இலக்கில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி பாடுபட்டார். பீமா கோரேகாவில் தலித் மக்கள் மீது பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நடத்திய தாக்குதல் காரணமாக சாதி மோதல் ஏற்பட்டது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

சாதி, சமயம் மற்றும் ஆட்சியின் அடிப்படையில் கலவரத்தை தூண்டுவதே பா.ஜனதாவின் பேராசை. அரசு செலவில் தனியார் பள்ளிக்கூடங்கள் செழித்து வளர அரசு அனுமதி அளிக்கிறது. அரசு பள்ளிக்கூடங்களை நிர்வகிக்க இயலாத அரசு, ஆட்சியில் இருப்பதற்கு உரிமை இல்லை. சமூக சீர்திருத்தவாதிகளான மகாத்மா புலே, சாவித்திரி பாய் புலேயின் கனவை மராட்டிய பா.ஜனதா அரசு நசுக்கிவிட்டது.

நான் டெல்லி முதல்–மந்திரியாக பதவி ஏற்ற சமயத்தில், ஏழை பெற்றோர் மட்டுமே தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைத்தனர். 3 ஆண்டுகளில், நவீன வசதிகளுடன் 300 புதிய பள்ளிக்கூடங்களை நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.

டெல்லி அரசின் பட்ஜெட் ரூ.40 ஆயிரம் கோடி தான். இருந்தாலும், பள்ளிக்கூடங்களை சீரமைக்கவும், புதிய பள்ளிக்கூடங்கள் கட்டவும் எங்களால் முடிகிறது. மராட்டிய அரசின் பட்ஜெட் ரூ.3 லட்சம் கோடி. ஆனாலும், அரசு பள்ளிக்கூடங்கள் இங்கு மூடப்பட்டு வருகின்றன.

முன்பெல்லாம் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்பட்ட டெல்லியில் இன்றைக்கு மின்கட்டணம் மிகவும் குறைவாக இருக்கிறது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கும் வகையில், சுவாமிநாதன் கமிட்டி அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த கோரி, விவசாயிகள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்த வேண்டும்.

டெல்லியில் பருவம்தவறிய கனமழையால், பயிர் நாசத்தை சந்தித்த விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் நாங்கள் இழப்பீடு வழங்கினோம். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.

முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சுதீர் சாவந்த், அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மியில் இணைந்தார்.


Next Story