வார்டு மறுவரையறை செய்ததில் குளறுபடி: சேலத்தில் ரேஷன் கார்டுகளை ரோட்டில் வீசி பொதுமக்கள் போராட்டம்

வார்டு மறுவரையறை செய்ததில் குளறுபடி காரணமாக, சேலத்தில் ரேஷன் கார்டுகளை ரோட்டில் வீசி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
சூரமங்கலம்,
தமிழகத்தில் உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு அவை வெளியிடப்பட்டுள்ளன. சேலம் மாநகராட்சி எல்லையில் உள்ள 60 வார்டுகளும் மறுவரையறை செய்து, அதிக வாக்காளர்கள் இருக்கும் வார்டில் இருந்து பிரித்து, மற்ற வார்டுகளில் எல்கை சேர்க்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகள் பலவற்றில் குளறுபடி உள்ளதாகவும், இதற்கு ஆட்சேபம் தெரிவித்தும் தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும், பொதுமக்களும் மாநகராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர்.
சேலம் சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட 23–வது வார்டு அம்மாசி பகுதியில், வார்டு மறுவரையறை செய்யப்பட்டதில், வாக்காளர்கள் 200–க்கும் மேற்பட்டவர்களை 25–வது வார்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கு அம்மாசி பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
23–வது வார்டு பகுதியிலே தங்களது வாக்காளர் பட்டியல் நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை திருவாக்கவுண்டனூர் பைபாஸ் சாலையில் பொதுமக்கள் திரண்டனர். பின்னர், அங்கு தங்களது ரேஷன் கார்டுகளை ரோட்டில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீஸ் தரப்பில் கூறுகையில், வார்டு மறுவரையறை தொடர்பான கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால் மண்டல அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்துதான் கொடுக்க வேண்டும். சாலையில் இடையூறாக நிற்கக்கூடாது. எதுவாக இருந்தாலும், எழுத்துப்பூர்வமாக சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் கொடுங்கள், என்றனர்.
அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ரோட்டில் வீசப்பட்ட தங்களது ரேஷன் கார்டுகளை எடுத்து கொண்டு கலைந்து சென்றனர்.