நெல்லிக்குப்பத்தில் குப்பை அள்ள டெண்டர் விடும் பணி: அதிகாரிகளை ஒப்பந்ததாரர்கள் முற்றுகை
நெல்லிக்குப்பம் நகராட்சியில் குப்பை அள்ளுவதற்கான பணியை தனியாரிடம் ஒப்படைப்பதற்காக டெண்டர் அறிவிக்கப்பட்டிருந்தது.
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பம் நகராட்சியில் குப்பை அள்ளுவதற்கான பணியை தனியாரிடம் ஒப்படைப்பதற்காக டெண்டர் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இதற்கான விண்ணப்பத்தை கடந்த 9–ந்தேதி நகராட்சியில் வழங்கினர். அப்போது, கமிஷனர் (பொறுப்பு) மகாராஜன் வெளியூர் சென்று இருந்ததால் அன்று நடைபெற இருந்த டெண்டர் படிவம் பிரிக்கும் பணி, 12–ந்தேதி நடைபெறும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று மாலை டெண்டர் படிவங்கள் ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் பிரிக்கப்பட்டது. அப்போது அதிகாரிகள் 8 நாட்களுக்கு பிறகு யார் தகுதியானவர்களோ அவர்களுக்கு டெண்டர் ஒதுக்கி அறிவிக்கிறோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு டெண்டர் படிவம் கொடுத்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவர்கள், படிவம் பிரிக்கப்பட்டதால், யார் குறைவான தொகை கொடுத்து அறிவித்து இருக்கிறார்களோ அவர்களுக்கு விதிமுறைக்கு உட்பட்டு பணிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆனால் அதற்கு அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார், இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள், அனைவரும் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்று கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.